திருச்சியில் நடைபெற்ற அந்-நஜாத் மாநாட்டில் அதன் நிர்வாகி ஜனாப்K.M.H அபூ-அப்தில்லாஹ் அவர்கள் அஹ்மதிகள் முஸ்லிம்கள் அல்ல என்பதற்கு மிகப் பெரும் சான்று ஒன்றை கூறியுள்ளார். அதாவது மிர்ஸா குலாம் அஹ்மதை நபியென்று ஒப்புக்கொள்ளாதவர்களை முஸ்லிம்கள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினால், அதனை அவர்களது ஏடான சமாதான வழி இதழில் பிரசுரிக்கட்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்.
இதுபற்றி எங்கள் கொள்கை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் கூறிய போதனைகளின் அடிப்படையாகும்.
அல்லாஹ் கூறுகிறான், நாட்டுப்புறத்தவர்கள் (அஹ்ராபிகள்) நாங்கள் விசுவாசித்தோம் என்று கூறுகின்றனர். நீங்கள் விசுவாசம் கொள்ளவில்லை. ஆனால் வழிப்பட்டோம் என்று கூறுவீராக (அதாவது முஸ்லிமாக உள்ளோம் என்று கூறலாம்) திருக்குர்ஆன் ( 49:15 )
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"நம்மைப்போல் தொழுபவனும், நமது கிப்லாவின் பக்கம் முகம் திருப்புபவனும், நாம் அறுத்ததைப் புசிப்பவனும், அல்லாஹ்வுடையவும்,அவனது தூதருடையவும் பாதுகாப்பு பற்றியுள்ள இந்த ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்." (ஸஹேஹ் புகாரி, கிதாபு ஸலாத், பாப் இஸ்திக் பாலுல் கிப்லத்) மேலும் இதுபற்றி அனைத்துலக அஹ்மதிய்யா ஜமாத்தின் ஆத்மீகத் தலைவர் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது அவர்களது கூற்றையே அந்நஜாத் நிர்வாகி அவர்களுக்கு பதிலாக தருகிறோம்.
14-7-1986 அன்று லண்டனிலுள்ள மஸ்ஜித் பஸலில் நடைபெற்ற மஜ்லிஸே இர்பானில் அஹ்மதி அல்லாத ஒருவர் கலிபா அவர்களிடம், "அஹ்மதிகள் ஷியா பிரிவினரை முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்கின்றனரா?" என்ற ஒரு வினாவைத் தொடுத்தார். அதற்கு கலீபத்துல் மஸீஹ் அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்கள்:-
"வேறு எவரும் அவர்களை உண்மையான முஸ்லிம்கள் என்று என்று எண்ணினாலும், எண்ணாவிட்டாலும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தைப் பொறுத்தவரை, தன்னை முஸ்லிம் என்று கூறுகின்ற அனைவரும் முஸ்லிம் என்று கூற தகுதி பெற்றவர்களே! இஸ்லாத்தின் சில விஷயங்களை மறுப்பவராக அவரை நீங்கள் கருதினால் அது வேறு விஷயம். ஆனால் ஒருவரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் உரிமை எவருக்குமில்லை கலிமா கூறுபவனும், க அபா வின் பக்கம் முகம் திருப்பி தொழுபவனும், இஸ்லாத்தின் ஐந்து அடிப்படை கொள்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ள எவரும் தன்னை முஸ்லிம் என்று கூறுவதற்கு உரிமை பெற்றவர்கள் என்பதுதான் எங்கள் கொள்கை.
அஹ்மதியா நூல்களில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிட்டுள்ள இடங்களில் அஹ்மதி அல்லாத முஸ்லிம்கள் என்றும், பிற மதத்தவர்களைப் பற்றி இடங்களில் முஸ்லிம் அல்லாதார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களது நூல்களில் முஸ்லிம்களை முஸ்லிம்கள் அல்லாதார் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை. எனவே எங்களின் நிலை மிகவும் தெளிவானதும்,விளக்கமானதுமாகும். ( அந்- நஸர் 3-10-86)