அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் P.J யின் அட்டகாசம்


ஒரு நபிக்கு கொடுக்காத சிறப்பை வேறொரு நபிக்குக் கொடுத்திருப்பது உண்மைதான் மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லா நபிமார்களைவிடவும் காத்தமுன் நபியாகிய நபி(ஸல்) அவர்களுக்கு எல்லாவகையிலும் அந்தஸ்தையும் சிறப்பையும் கொடுத்திருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா? மறைமுகமாக அல்லாமல் நேரடியாக பதில் கூறுங்கள். நாங்கள் குரானின் அடிப்படையிலேயே மறுத்து நபி(ஸல்) அவர்கள்தான் எல்லா நபிமார்களை விட எல்லாவகையிலும். சிறந்தவர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படாத எந்த அந்தஸ்தையும் வேறொரு நபிக்குக் கொடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டுகிறோம். நிரூபித்துக்காட்டி வருகிறோம்.


அடுத்து 4:157,158 வசனங்களைக் காட்டி அவர் மரணிக்கவில்லை அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டான். என்று கூறி இதில் அந்தஸ்து என்பது ஏற்புடையதாகாது. உடல் ரீதியாகத்தான் உயர்த்திக் கொண்டான் என்று விரிவுரை வழங்கியுள்ளீர்கள்.இதற்க்கு துணையாக 43;61 ஆயத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளீர்கள்.

இறைவன் ஜடபொருளாகவோ, அவனுக்கென்று ஒரு தனி இடத்தைஅமர்த்திக் கொண்டால்தான் உங்களின் உடல் ரீதியான உயர்வு, வாதம் எடுபடும். ஆனால் இங்கு அந்தஸ்துதான் என்பதற்கு இறைவனின் இருப்பிடம் சம்பந்தமான ஒரு கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய மறுமொழி ஒரு சான்றாக உள்ளது.

நீங்கள் அந்நஜாத்தில் ஆசிரியராக இருந்த போது 1986, செப்டம்பர் இதழில் பக்கம் 46 இல் சிறுவர் பகுதியில் அலாவுதீன் அவர்கள் கேள்வி-பதில் பகுதியில் 'அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷின் மீதிருக்கிறான் அர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான்' (20:5) என இறைவன் தன்னைப் பற்றி குறிப்பிடுகின்றான். அதாவது 'மதிப்பில் உயர்ந்திருக்கிறான். கண்ணியத்தால் உயர்வு பெற்றிருக்கிறான்' என்று அதற்குப் பொருள் கொள்ளவேண்டும் என நபி(ஸல்) கூறியதாக புகாரியில் ஒரு அறிவிப்பில் காணப்படுகிறது என எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? அல்லாஹ் தன்னளவில் உயர்த்திகொண்டான் என்றால் அந்தஸ்து அளவில் உயர்த்திக் கொண்டான் என்றே பொருள் கொள்ள வேண்டுமேயல்லாது உடல் ரீதியாக அப்படியே உயர்த்திக்கொண்டான் என்றால், அதனால் எழும் பல்வேறு கேள்விகளுக்குப் பகுத்தறிவு ரீதியிலான பதில் சொல்லமுடியாமல் போய்விடும். இறுதியில் அல்லாஹ்வின் வல்லமையில் பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான்.

மேலும் (4:157,158) வசனங்களின் அடிப்படையில் யூதர்கள், மரியமின் குமாரரைக் கொன்றுவிட்டதாக கூறுகிறார்கள், ஏன் கொலை செய்ய எண்ணவேண்டும்? அவருடைய உடலைக் கொன்று விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? பிரச்சனை அங்கு 'நபித்துவம்' என்ற அந்தஸ்து விஷயம்தானே அல்லாது உடல் சம்பந்தப்பட்டதல்ல,

ஈசா(அலை) தம்மை இறைவனிடமிருந்து வந்துள்ள தூதர் என்று வாதித்தார்கள் யூதர்கள் அவரை எப்படியும் பொய்ப்படுத்தியே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எத்தனையோ வழிகளில் முயற்சி செய்து தோல்வியடைந்து, இறுதியில் அவரைத் தங்களின் வேதத்தில் கூறப்பட்டபடி சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டால் அவர் சபிக்கப்பட்ட மரணத்தையடைந்து விட்டார் என்று பிரபல்யப்படுத்தி, சபிக்கப்பட்ட மரணத்தை அடைந்தவர் எப்படி நபியாக அந்தஸ்தில் உயர்ந்தவராக இருக்கமுடியும் என்று கூறி அவரைப் பொய்ப்படுத்தி விடலாம் என்று எண்ணி அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லத் திட்டம் தீட்டி செயல் பட்டனர். நபி என்ற அந்தஸ்திலிருந்து சபிக்கப்பட்ட அந்தஸ்திற்கு கொண்டுவரவே அவர்கள் முனைந்தனர்.

யூதர்களுக்கும் ஈசா(அலை) அவர்களுக்கும் இடையிலுள்ள பிரச்சனை சொத்துத் தகராறோ, கொடுக்கல் வான்கள் தகராறோ அல்ல. அவர்களின் உடலை மட்டும் கொன்று அவர்களுக்கு அதனால் என்ன லாபம்? அந்த இடத்தில்தான் இறைவன் ஈசா(அலை) அவர்கள் உண்மையான நபி: அவர்கள் அந்தஸ்தில் குறைந்தவரல்ல என்று நிரூபிப்பதற்காக அவரை சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றி அவருக்கு அந்தஸ்தில் உயர்வைக் கொடுத்தான். இதில் யாரும் திடீரென அந்தஸ்துக்குத் தாவவில்லை. பிரச்சனையே ஈசா(அலை) அவர்களின் நபித்துவம்(அந்தஸ்து) பற்றியதுதான். நீங்கள்தான் 'உடல்' என்று தாவி புதுவடிவம் கொடுத்து விரிவுரை என்ற பெயரில் விளையாடியுள்ளீர்கள்.

நிச்சயமாக அவர் இறுதிநாளின் அடையாளமாவார்(43:61) என்ற ஆயத்திற்கு நீங்களாகவே ஒரு விளக்கமளித்ததோடல்லாமல் நபி(ஸல்) அவர்கள் அந்த ஆயத்திற்கு விளக்கமளித்ததுபோன்று ஒரு தோற்றத்தை புகாரி,முஸ்லிம் ஹதீஸ் மூலம் காட்டியுள்ளீர்கள். அந்த ஹதீஸ், இப்னு மர்யமின் வருகையைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் அந்த வருகை எப்படி நிகழும் என்பதையும் சுன்னத்துல்லாவின் அடிப்படையில் ஏற்கனேவே விளக்கியுள்ளோம். அந்த நேரத்தின் அடையாளம் என்ற வசனத்திற்கு அந்த ஹதீஸ் விளக்கமாகாது.

விளக்கமில்லாத ஹதீஸை உங்களுக்குச் சாதகமாக விளக்கம் என்று எடுத்துக் காட்டி. உண்மையிலேயே ஈசா(அலை) அவர்களின் மரணத்திக்கு சான்றாக நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளதாக உள்ள புகாரியில் தெளிவாக வந்துள்ள (பலம்மா தவபைத்தனி என்ற (5:118) ஆயத்திற்கு விளக்கம்) ஹதீஸை மறைத்துள்ள காரியம், நீங்கள் எவ்வளவு பெரிய மோசடிக்காரர் என்பதை தெளிவாக உணர்த்தக் கூடியதாக உள்ளது. ஒரு பிரச்சனை சம்பந்தமாக திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றிலிருந்து, எல்லா வசனங்களையும் இணைத்து முரண்படாத வகையில் விளக்கமளித்து, ஒரு முடிவுக்கு வரவேண்டுமேயல்லாமல், விரிவுரை எழுதுவதாகக் கூறிக்கொண்டு முரண்படக்கூடியவிதத்திலும் யுக்திக்கும், புத்திக்கும் பொருந்தாத விதத்திலும் ஒன்றைக் காட்டி மற்றொன்றை மறைத்து எழுதினால் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும்தான் ஆளாக நேரிடும். அறிவுடைய மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்வார்கள், சிந்தித்து செயல்படக்கூடியவர்கள் மத்தியில் உங்களின் வாதம் எடுபடாது. விரைவில் உங்களின் தவ்ஹீது மூட்டையைக் கட்டிக் கொண்டு ஓட நேரிடும். உங்களின் தவறான கருத்துக் அடிகிடைக்கின்றபோது அந்த ஆயத்துகளையும், ஹதீஸ்களையும் கண்டுகொள்ளாமல் நழுவுவதும் உங்களுக்குக் கைவந்த கலையாக உள்ளது.

'இன்னஹுல இல்முஸாஅத' என்ற வசனத்தில் ஈசா(அலை) இறுதி நாளின் அத்தாட்சியாகும் (அடையாளம்) என்று எழுதியுள்ளீர்கள். 'இன்னஹு' என்பதில் 'ஹூ' என்பது குரானைக் குறிக்கும் என்று பல விரிவுரையாளர்கள் எழுதியுள்ளார்களே! அது எப்படி உங்களுக்கு உறுதியான சான்றாக முடியும். இறுதி நாள் என்று எங்கேஉள்ளது? அந்த வசனத்திலுள்ள 'ஸாஅத' என்பது அந்த நேரம் என்றல்லவா பொருள்படும்.

இதனால் அவர் விண்ணில் உள்ளார் என்பதற்கு என்ன சான்று? உயிருடன் விண்ணிலிருந்து இறங்குவார் என்று அதில் எழுதப்படவில்லையே, இனி ஹதீஸில் அவர் இறங்குவார் என்றிருக்கிறது என்றால் அதற்கு திருக்குரானின் அடிப்படையிலேயே பொருள் கொள்ளவேண்டும்.

இன்னும் 'இல் முஸ்ஸாஅத்' என்பது ஈசாதான் என்று அடம்பிடிப்பதானால். அந்த சூராவின் 86 வது வசனத்தில் 'வ இன்ஹு இல்முஸ்ஸாஅதி' என்று வந்துள்ளது. அதாவது உங்கள் கருத்துப்படி ஈசா(அலை) அவனிடம் இருக்கிறார் என்று பொருள் வைத்துக் கொண்டாலும் தொடர்ந்து அல்லாஹ்கூறுகின்றான் 'வ இலைஹி துர்ஜவூன்' என்று, அதாவது நீங்கள்தான் அவரிடம் செல்லவேண்டுமே அல்லாது ஈசா இங்கே வரமாட்டார், எனவே இனிமேலாவது 'இல்முஸ்ஸா அ' என்று கூறி ஏமாறவும் வேண்டாம் ஏமாற்றவும் வேண்டாம். அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் இப்னு மர்யம்வருவார்கள்., இறங்குவார்கள் என்று கூறியுல்லார்களே அதற்க்கு என்ன பொருள்? என்று வினவலாம். அதற்க்கு பதில் ஏற்கனேவே கூறியுள்ளேன்.

'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்பதற்கு முன்னாள் ஈசா(அலை) அவர்களின் உடலையும் சேர்த்துக் கூறப்பட்டதனால் (கொலை செய்தல், சிலுவையில் அறைதல்) 'ரபா ஆ' என்ற உயர்த்துதலும், உடலோடுதான் என்று எழுதியுள்ளீர்கள். 'ரபா ஆ' என்பதற்கு நீங்கள் சுயமாகக் கொடுத்துள்ள பொருள் தவறானதாகும் ஏனெனில் திருக்குரானில் 'ரபா ஆ' என்ற சொல் நீங்கள் கொடுக்கின்ற பொருளில் எங்கேயும் வரவில்லை. ஹதீஸ்களிலும் 'ரபா ஆ' என்ற சொல் உடலுடன் உயர்த்துவதாக எங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் காண முடியாது. உங்களைவிடப் பெரிய விரிவுரையாளர்கள் பலர் சென்றுள்ளனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக 'ரபா ஆ' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். அரபு அகராதி 'லிஸானுல் அரபு' விலும் 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. எல்லாம் உங்களின் கூற்றை மறுக்கிறது. இவ்வாறிருக்க அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள், சென்றகாலப் பெரும்,பெரும் விரிவுரையாளர்கள், அகராதி ஆகியவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு, உங்கள் தவறான கற்பனைப் பொருளை என் ஏற்றுக் கொள்ளவேண்டும்? திருக்குரான், ஹதீஸ்களிலிருந்து 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்தப்பட்டதற்க்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் ஏற்கிறோம்.

மேலும் 'ரப அஹூ' எனபதில் ஹூ என்பது ஈசாவின் உடலையும் சேர்த்துதான் குறிக்கும் என்ற உங்களின் சுயசிந்தனையின் அடிப்படையிலான வாதத்தையும் திருக்குர்ஆன் மறுக்கிறது. (3:170) இல் இறை வழியில் கொலை செய்யப்பட்டவர்கள் அவர்களின் இறைவனிடத்தில் உயிருடன் இருக்கிறார்கள். உணவளிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கியவற்றால் மகிழ்ச்ச்சி அடைகின்றார்கள் என்று வந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் உயிருடன்தான் இருக்கின்றார்களா? உடலுக்கும் சேர்த்துதான் உணவளிக்கபப்டுகின்றார்களா? உடலுடந்தான் மகிழ்ச்சியடைகின்றார்களா? ஏனெனில் இதில் வந்துள்ள சுட்டுப் பெயர்கள் 'குதிலூ' என்று கொலை செய்யப்பட்டவர்கலையே குறிக்கும்.

ஈசாவைக் கொல்லவில்லை. சிலுவையில் அறையவில்லை என்று சொல்வதானால் கொலைசெய்யப்படாதவரும், சிலுவையில் அறையப்படாதவரும் சாகக் கூடாது என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது? சிலுவையில் அறையப்படாமல், கொலை செய்யப்படாமல் இறந்த பின்னர் 'ரப அ' செய்யப்பட்டார் என்று சாதாரண அறிவுடையவர்கள் கூட எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும். ஏனெனில் (3:56) இல் அல்லாஹ். 'நான் உன்னை என்னளவில் உயர்த்துவேன்' என்று வாக்குறுதி அளிப்பதற்கு முன்னதாக நான் உன்னை மரணிக்கச் செய்வேன் என்று கூறியிருந்தான். என்னளவில் உயர்த்துவேன் என்ற வாக்குறுதியைப் பூர்த்தி செய்ததாக 'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்ற வசனத்தில் உறுதிப் படுத்திவிட்டான் என்றால் அதற்க்கு முன்னர் மரணமடையசெய்வேன் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றியதாகத் திருக்குர்ஆன் ( 5:118 ) இல் (பலம்மா தவப்பைத்தனி) என்ற சொல்லால் இறைவன் உறுதிபடுத்தியுள்ளான்

ஈசா மீண்டும் உலகிற்கு வந்து, இறந்துபோன பின்னர்தான் மேற்கண்ட ஆயத்தில், குறிப்பிட்டவை நிகழும் என்று நினைப்பதாக இருந்தால், அது உங்களின் கற்பனையே தவிர உண்மையில்லை. ஏனெனில் அந்த உரையாடல் 'வ இத்காலல்லாஹூ' என்று இறந்த காலச் சொல்லில்தான் ஆரம்பிக்கிறது. மேலும் ஈசாவின் இந்த வார்த்தைகளை எடுத்தாளுகின்றபோது நபி (ஸல்) அவர்கள் ; ப அகூலு கமாகால அப்துஸ்ஸாலிஹ் - (புகாரி கிதாபுத் தப்சீர்) அதாவது அதாவது அல்லாஹ்வின் நல்லடியார் கூறியதுபோல் நானும் கூறுவேன்' என்றுதான் கூறியுள்ளார்களே தவிர 'கமா யகூலு' அவர்கள் கூறப்போவதுபோல் என்று கூறவில்லை. எனவே இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஈசா உயர்த்தப்படுதளுக்கு முன்னதாகவே அவரது மரணமும் நிகழ்ந்துவிட்டது என்பதாகும். இதனை அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் உறுதிப்படக் கூறியிருக்கும்போது, நீங்கள் மட்டும் அதனை மறுக்கிறீர்கள் என்றால் நாங்கள் அதை ஏற்க்கவேண்டுமா? குரான் ஹதீஸ் அறிவுடைய நபி(ஸல்) அவர்களை மதித்து நடக்கக் கூடிய எந்த முஸ்லிமும் என்றுக் கொள்ள மாட்டான்.

மேலும் நீங்கள், ஈசா(அலை) உடலுடன் உயர்த்தப்பட்டு உயிருடன் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் இறைவன் குர்ஆனில் கூரிவதைப் பாருங்கள். 'ஈசா தான் அல்லாஹ் என்று கூறிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்: மஸீஹ் இப்னு மர்யம். ஒரு தூதர் மட்டுமே, அவருக்கு முன் வந்த தூதர்கள் மரணித்துவிட்டனர்', (5:73-76 ) என்று இங்கே ஈசாவுக்கு முன்தோன்றிய தூதர்கள் இறந்துவிட்டதைப் போல் ஈசாவும் இறக்காமல், அவர் மட்டும் விண்ணில் உயிருடனும், உடலுடனும் இருக்கிறார் என்றால், ஈசா மற்ற தூதர்களைப் போன்றல்லாததால் இறைவனாவார் என்ற கிறிஸ்தவர்களின் கூற்றுக்கு இவ்வசனம் எவ்வாறு மறுப்பாக முடியும்? அல்லாஹ் கிறிஸ்தவர்களின் தவறான கடவுள் கொள்கையை மறுத்து சான்றாகக் காட்டும் இந்த வசனம் பயனற்றதாகப் போய்விட்டதா?

உடலோடும் இருக்கிறதாகக் கூறுகிறீர்களே; அல்லாஹ் நாடினால் உணவளிக்க முடியும் என்கிறீர்களே; அவருடைய உடலும் இப்போது இல்லை. உணவு உண்பதுமில்லை என்று அல்லாஹ் கூறுவது உங்களுக்கு கேட்கவில்லையா? அல்லாஹ் ஈசாவைப் பற்றி உணவருந்திக் கொண்டிருந்தார் என்று (5:76) கூறுகிறான். அதாவது இப்போது அவர் உணவருந்தவில்லை: சென்ற காலத்தில் தான் உணவருந்தினார். இப்போது என் உணவருந்தவில்லை என்றால் அதற்குத் தேவையான உடல் இல்லை. ஏனெனில் அவர் இறந்துவிட்டார். என்று இறைவன் கூறுகிறான்.

(21:9) இல் ஈசா உட்பட உள்ள எந்தத் தூதருக்கும் உணவருந்தாதத் தேவையில்லாத உடலை வழங்கவில்லை என்கிறான். எனவே அவருக்கு உடல் இருந்தால் கட்டாயம் அவர் உணவருந்தியே ஆகவேண்டும். என்பது அல்லாஹ்வின் கூற்று எனேவேதான் அவர் இப்போது உணவருந்துவது எப்படி? என்று நாங்கள் கேட்கிறோம்.

அடுத்து ஈசாவும் அவருடைய தாயாரும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள் (5:76) என்று இறைவன் கூறி, இப்போது உணவருந்தவில்லை என உறுதிப்படுத்துகிறான். நீங்கள்தான் அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டு உணவு ஊட்டுகிறீர்கள். ஆனால் அவர் இப்போது உணவு உண்ணவில்லை என்று இறைவன் அறிவிப்பதால் அவர் உடலுடன் இல்லை என்று உறுதியாகிறது. இன்னும் அவர் உணவு தேவை இல்லாத உடலுடன் விண்ணில் இருப்பதாக அடம்பிடிப்பதானால், அதன் பொருள் (21:9) இன் படி அவர் நபியாக முடியாது. ஏனெனில் நபியாக இருந்தால் இறைவாக்குப்படி உணவு உட்கொள்ளக்கூடிய உடல் தேவை (21:9)

ஆகவே அவர் கிறிஸ்தவர்கள் கூறுவது போல் இறைவனின் மகனோ, இறைவனோ ஆவார் என்று மறைமுகமாக ஏற்றுக்கொள்வதாகிவிடும். இதுதான் மறைமுகமான 'ஷிர்க்' இப்படிப்பட்டவர்கள்தான் 'முஷ்ரிக்'. முஸ்ரிக்குகளைப் பற்றி அவர் 'நஜீஸ்' ஆவார் என்று (9:28) அல்லாஹ் கூறுகிறான். அப்படிப்பட்ட நஜீஸ்களால் திருக்குரானின் உண்மையை உணரமுடியாது என்று அல்லாஹ் (56:80) கூறுகிறான். எனவே இப்படிப்பட்ட கொள்கையை உடையவராக இருந்தால் திருக்குரானை விளங்கவே முடியாது, அறிந்து திருந்திக் கொள்க. திருத்திக் கொள்க.