இஸ்லாம் மீண்டும் ஒளிவீசிப் பிரகாசிக்க வேண்டும். முஸ்லிம்கள் முன்பு பெற்றிருந்த பெருமைகளையும் மகத்துவங்களையும் மீண்டும் பெற வேண்டும். அழிவைநோக்கி சென்றுகொண்டிருக்கும் மனித சமுதாயம் இறைவன் பால் திரும்ப வேண்டும். என்பன போன்ற உயரிய நோக்கங்களை உலகில் நிலை நாட்ட இறைவன் புறமிருந்து இக்காலத்தின் இறைத்தூதராக இமாம் மஹ்தியாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தோன்றினார்கள். இத்தகைய உயர்ந்த இலட்சியங்களுக்காக இவர்களால் உருவாக்கப்பட்ட அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத், இன்று உலகின் எல்லைகள் வரை கிளை பரப்பி தனது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
எனினும் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றபோது அவற்றால் பாதிக்கப்படும் தீய சக்திகள் அவற்றை எதிர்க்கும் என்பது ஒரு நியதியேயாகும். இதற்க்கேற்ப முஸ்லிம் சமுதாயத்தில், ஏன், முழு மனித சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை-மறுமலர்ச்சியை ஏற்படுத்தத் தோன்றிய இமாம் மஹ்தி (அலை) அவர்களும் தீய சக்திகளின் பலமான எதிர்ப்பிற்கு இலக்கானார்கள். உண்மையே நிலைக்கும், பொய் அழிந்தே தீரும் என்ற இறைவாக்கில் நம்பிக்கையற்ற ஷைத்தானிய உடன்பிறப்புகள், இமாம் மஹ்தி தோன்றிய நாள்முதல் அவர்களுக்கெதிராக அவதூறு களையும் போய்க் குற்றச்சாட்டுகளையும் கூறியே வந்துள்ளன.
இமாம் மஹ்தி (அலை) அவர்களை ஏற்ற நல்லவர்கள் ஆன்மீகத்தில் முன்னேறி வரும் அதே சமயத்தில் ஷைத்தானிய உடன்பிறப்புகள் தங்களின் எதிர்ப்பில் மிகத் தாழ்ந்து தரங்கெட்டு தங்களின் இயல்பிற்கு ஏற்ப, தங்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ப மிக அசிங்கமான ஆட்சேபனைகளை செய்கின்றனர். இவர்களின் அருவருக்கத்தக்க பேச்சுக்களும், எழுத்துக்களும் இவர்கள் இழிவானவர்கள் என்பதையே வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.
இறை தூதர்களை எதிர்க்கின்றவர்கள் எப்போதுமே மூன்று வழிகளைக் கையாளுகின்றனர். சிலர் அவர்களை மார்க்கத்திற்குப் புறம்பானவர்கள் எனப் பறை சாற்றுகின்றனர். இன்னும் சிலரோ அரசியல் ரீதியிலான அல்லது சமூக ரீதியிலான குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்துகின்றனர். இவர்களில் கடைநிலையில் உள்ளவர்கள், தூய்மையே உருவான அந்த இறைத்தூதர்கள் மீது ஒழுக்கம் தொடர்பான குற்றச் சாட்டுகளை சுமத்துகின்றனர்.
'நான் உங்களோடு வாழ்ந்த ஒருவனல்லவா? அதாவது என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனது நன்னடத்தைக்கு நீங்களே சாட்சி என்று தமது அப்பழுக்கற்ற வாழ்க்கையையே சவாலாக விடுத்த ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கூட இத்தகைய ஒழுக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இன்றும் கூட கிருஸ்தவர்களாலும்,யூதர்களாலும், சல்மான் ருஷ்டி போன்ற நயவஞ்சகர்களாலும் இத்தகைய அவதூறுகள் கூறப்பட்டு வருகின்றன.
எனவே இக்காலத்தின் இறைத்தூதராகவும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக இமாம் மஹ்தியாகவும் தோன்றிய ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீதும் இத்தகைய அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் கூறப்படுவது நூதனமான ஒன்றல்ல
அஹ்மதியா ஜமாத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்ற அவதூறுகளில் ஒன்று,ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள், முகம்மதி பேகம் என்ற பெண்ணை விரும்பி, அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் அவளைத் தமக்கு மணமுடித்து தரவேண்டும் என்று கேட்டதாகவும் அவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் இறைவனின் தண்டனை அவர்களுக்கு கிடைக்குமென அறிவித்ததாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்பதாகும். இவ்விசயத்தை அது எந்த அளவுக்கு உண்மை என்பதி இவர்கள் ஆராயாது தமது கீழ்த்தரமான எண்ணங்களுக்கு ஏற்ப கொச்சைப்படுத்தி கூறி வருகின்றனர்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துலகுக்கும் அருளாகத் தோன்றிய ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்களை இறைவனது கட்டளைக்கேற்ப செய்தார்கள். ஆனால் அந்த மாநபியை எதிர்த்தவர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி தம் மனம் போன போக்கில் கீழ்த்தரமாக விமர்சித்தனர். இன்று கூட அவ்வாறு விர்மர்சிப்பவர்கள் உண்டு. இவ்வாறே ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் வாழ்க்கையை விமர்சிப்பவர்களும் தரங்கெட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.
உண்மையில் நடந்தது என்ன?
முகம்மதி பேகம் என்பவர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் தந்தை வழி உறவினரான மிர்ஸா அஹ்மத் பேக் என்பவரின் மகளாவார். இந்த மிர்ஸா அஹ்மத் பேக் ஒரு நாஸ்த்தீகர். இவர் முஸ்லிம் பெயரை கொண்டிருந்த போதிலும் இறைவன் இருக்கின்றான் என்பதிலோ, திருக்குர்ஆன் இறைவேதம் என்பதிலோ, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதிலோ நம்பிக்கை இல்லாதவராவார்.
இறைவனின் ஏகத்துவத்தையும் திருக்குரானின் மகத்துவத்தையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேன்மையையும் மீண்டும் உலகில் நிலை நாட்டுவதையே தமது இலட்சியமாகக் கொண்டிருந்த ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்குத் தமது உறவினர்களின் மார்க்க விரோதப்போக்கு மிகுந்த வேதனை அளித்தது. அவர்கள் பலமுறை அந்த உறவினர்களுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் அந்த உறவினர்களோ தங்களைத் திருத்திக்கொள்ளாமல் ஏளனம் செய்வதிலும் எள்ளி நகையாடுவதிலும் காலத்தைக் கழித்தார்கள்.
இது பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் 'தமது ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம்' என்னும் நூலில் 566 ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:-
"அவர்கள் நாளுக்கு நாள் தங்களது தவறான போக்கிலும், அகங்காரத்திலும் முன்னேறி தங்களது தீயக் கருத்துக்களைப் பரப்பி அப்பாவி மக்களை வழிகெடுத்தார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏசினார்கள். இறைவசனங்களை (திருக்குரானை) மறுத்தும் இறைவனையே நிராகரித்தும் பிரசுரம் ஒன்றை வெளியிட்டார்கள்."
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் குறிப்பிட்ட அந்த பிரசுரத்திற்கு அக்காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த கிருஸ்தவ அமைப்புகள் தமது பத்திர்கைகளில் விளம்பரம் செய்தனர். அதுமட்டுமல்ல,அந்த உறவினர்கள் அக்காலத்தில் இஸ்லாத்திற்கு பெரும் பகைவர்களாக விளங்கிய ஆரிய சமாஜ் காரர்களுடன் கைகோர்த்து மார்க்க விரோதத் செயல்களில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர்களின் நடத்தைகள் எல்லை மீறிப் போனதால் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஹஸ்ரத் அஹமத் (அலை) அவர்கள் கீழ்வருமாறு இறைவனை வேண்டினார்கள்.
"என்னுடைய இறைவனே! உன்னுடைய இந்த அடியானுக்கு உதவி செய்வாயாக. உன்னுடைய பகைவர்களை இழிவுபடுத்துவாயாக. என்னுடைய இறைவனே ! எனது பிராத்தனையை ஏற்றுக் கொள்வாயாக எவ்வளவு காலந்தான் இவர்கள் உன்னையும் உன்னுடைய திருத்தூதரையும் ஏளனம் செய்வார்கள்? எவ்வளவு காலம்தான் உனது திருக்குர்ஆனைப் பொய்யாகி உன்னுடைய திருத்தூதரை அவமதிப்பார்கள்? என்றும் நிலைத்திருப்பவனே, சுயமாக நின்று உதவி செய்பவனே, உனது கருணையை வேண்டுகிறேன். (ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம் 569)
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் செய்த இந்தப் பிராத்தனையிலிருந்து அவர்களுக்கும் மேற்கூறப்பட்ட அவர்களின் உறவினர்களுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை என்பது புலனாகும். உண்மையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் மார்க்கப்பற்றும் இறைவன் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசமுமே இவ்வாறு பிராத்தனையை ஏற்று வரம்பு மீறி செயல்படும் அந்த உறவினர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப் போவதாக அறிவித்தான்.எனினும்.
'ஒருவன் அநீதியிழைத்தப் பின் மனம் வருந்தி திருந்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவனை மன்னித்து அருள்புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மென்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.' (திருக்குர்ஆன் 5:40)
என்ற இறைவனின் வாக்குறுதிக்கு ஏற்ப அந்த உறவினர்களுக்கு அவர்கள் திருந்திக் கொள்ள அவகாசம் அளித்தான். மேலும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு அறிவித்தான்.
" நான் அவர்களை ஒரே அடியாக அல்லாமல் படிப்படியாகவே அழிப்பேன். ஏனெனில் அவர்கள் அவர்களின் தீயப் பாதையிலிருந்து திரும்பலாம். எனது சாபம் அவர்களின் வீட்டின் மீது இறங்கும். மூத்தவர்கள் மீதும், இளையவர்கள் மீதும், ஆண்கள் மீதும், பெண்கள் மீதும், அவர்களுடைய விருந்தினர் மீதும் இறங்கும். நம்பிக்கை கொண்டு அவர்களிடமிருந்து விலகிக் கொள்பவர் இறை கருணையின் கீழ் இருப்பார். ஏனைய அனைவரும் சபிக்கப்படுவார்கள்." (ஆயினையே கமாலாத்தே இஸ்லாம், பக்கம் 569)
இந்த இறையறிவிப்பை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பிரகடனம் செய்து அவர்களின் அந்த உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள். முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறிய முன்னறிவிப்பு, முழுமையாக நிறைவேறவில்லை என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் திருக்குர் ஆன் வசனத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பெற்ற இறையறிவிப்பிலுள்ள நிபந்தனையைக் குறித்து சிந்திப்பதுமில்லை. இந்த முன்னறிவிப்பில் கூறப்பட்டபடி மார்க்க விரோதச் செயலில், இறைவனுக்கு அஞ்சாது தொடர்ந்து ஈடுபட்டவர்கள் இழிவடைந்து அழிந்து போனார்கள். மனத்திரும்பியவர்களோ காப்பற்றப் பட்டார்கள் என்பதே உண்மை.
முகம்மதி பேகத்தின் பெற்றோர் தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள்:-
'மிக அருளாளனான இறைவன் வஹி மூலம் எனக்கு அறிவித்திருப்பதாவது.'அவர்கள் திருந்தவில்லையென்றால் அவர்கள் தண்டனை மூலம் திருத்தப்படுவார்கள். அவர்கள் தீய வழிகளிலிருந்து திரும்பவில்லைஎன்றால் விதவைகளால் அவர்களின் வீட்டை நான் நிரப்புவேன். அவர்கள் திருந்தி தங்களைச் சீர்திருத்திக் கொண்டால் நாம் அவர்களிடத்து கருணையுடன் திரும்புவோம். அவர்களுக்கு தரவிருக்கும் தண்டனையை நிறுத்திவிடுவோம். இவ்வாறு அவர்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்படுவதை அனுபவிப்பார்கள். (அன்ஜாமே ஆத்தம் பக்கம் 211)
மேலும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கண்ட ஆன்மீகக் காட்சியில் முகம்மதி பேகத்தின் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். இதைத் தொடர்ந்து முகம்மதி பேகத்தின் தாய் வழிப் பாட்டிக்கு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஓர் எச்சரிக்கையை விடுத்தார்கள். 'நீங்கள் மனம் திரும்பி, திருந்த வேண்டும். ஏனெனில் துன்பங்கள் உங்களைத் துரத்துகிறது என்று அவரிடம் கூறினார்கள்' (தப்லீகே ரிஸாலத் பக்கம் 162)
ஆனால் முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் எச்சரிக்கைகளைக் கண்டு கொள்ளவில்லை. மிகுந்த அகங்காரத்தோடு அவற்றைப் புறக்கணித்தார்கள். அவர்களுள் சிலர் கிறிஸ்தவர்களோடும், சிலர் ஆரியர்களோடும் தங்களை இணைத்துக் கொண்டனர். ( நூற் அப்ஸ்ஸான் mஎ 10, 1888)
மிக வெளிப்படையாக அவர்கள் இவ்வாறு கூற ஆரம்பித்தார்கள்:
எங்களுக்கு அல்லாஹ்வோ அவனது வேதமோ அவனுடைய தூதரோ அவசியமில்லை. எங்களின் வாழ்க்கையில் நிகழும் அடையாளத்தைத் தவிர எந்த அடையாளத்தையும் நாங்கள் ஏற்க்க மாட்டோம். நாங்கள் குரானை நம்பவில்லை. நபித்துவம் என்றால் என்னவென்றோ மார்க்கம் என்றால் என்னவென்றோ எங்களுக்குத் தெரியாது. இவற்றையெல்லாம் நாங்கள் மறுக்கின்றோம். (கரமத்துஸ் சாதிக்கீன்)
இதன் விளைவாக ஏற்கனவே அறிவித்தபடி இறைவனின் தண்டனைகள் அந்தக் குடும்பத்தில் இறங்க ஆரம்பித்தன. முகம்மதி பேகத்தின் சிறிய தகப்பனார் மிர்ஸா நிசாமுத்தீன் மிகப் பெரிய துன்பத்தை சந்தித்தார். இருபத்தைந்து வயதே நிரம்பிய அவருடைய மகள் ஒரு குழந்தையை நிர்க்கதியாக விட்டுவிட்டு அகால மரணமடைந்தார் . (தப்லீக்கே ரிஸாலத் பக்கம் 1)
இந்த சம்பவம் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும் அவர்கள் மனம் மாறவில்லை. இதனைத் தொடர்ந்து மிர்ஸா நிசாமுத்தீனும் காலமானார்.
இந்தச் சம்பவங்களின் பின்னணியை உணர்ந்து இவருடைய மகன் மிர்ஸா குல் முகம்மதுவும் மற்றொரு மகளும் மனம் திருந்தி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் 'பை அத்' செய்தார்கள். மிர்ஸா நிசாமுத்தீன் சகோதரர் மிர்ஸா இமாமுத்தீனின் ஒரே வாரிசான குர்ஷீது பேகம் என்பவரும் இவர்களைத் தொடர்ந்து 'பை அத்' செய்தார்கள்.
மிர்ஸா நிசாமுத்தீனின் இன்னொரு சகோதரரான மிர்ஸா கமாலுத்தீன் என்பவர் குடும்ப வாழ்வைத் துறந்து இந்தியாவின் கபருஸ்தான்களில் தமது எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க காதியானை விட்டு வெளியேறினார். இவர் தமது ஆண்மையைத் தாமாக அழித்துக் கொண்டு அதற்காக வாழ்நாள் பூராவும் வருந்தினார். இறுதியில் சந்ததியின்றி இறந்து போனார்.
இந்நிலையில் மேற்கண்ட குடும்பத்தினர் திருந்துவதற்கும் நல்வழி பெறுவதற்கும் ஒரு வாய்ப்பு அளிக்கும் முகமாக அல்லாஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு பின்வருமாறு அறிவித்தான்.
"அவருடைய (மிர்ஸா அஹ்மத் பேக்குடைய) மகளான முகம்மதி பேகத்தை உமக்கு மணமுடித்து உம்முடன் ஓர் உறவை அவர் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் உமது ஒளியிலிருந்து அவர் ஒளி பெறவேண்டும். "
இதனைத் தொடர்ந்து இறைவன் மேலும் பின்வருமாறு அறிவித்தான்:
இதனை ஏற்காமல் அவர் தம்முடைய மகளை வேறெவருக்காவது மணமுடித்துக் கொடுத்தால் அந்தத் திருமணம் அவருக்கோ அவரது மகளுக்கோ அருளாக அமையாது. அவரிடம் கூறுவீராக: அவர் வேறு விதமாக நடக்க முற்பட்டால் துன்பங்கள் அவரைத் தொடர்ந்து வந்தடையும். அவற்றின் இறுதி கட்டமாக அவருடைய இறப்பு நிகழும். அது அவருடைய மகளை இன்னொருவருக்கு மணமுடித்து மூன்று ஆண்டுகளுக்குள் நிகழும் அவருடைய மரணம் மிக அருகில் உள்ளது என்றும் அது அவர் எதிர்பாராத நேரத்தில் நிகழும் என்றும் அவரை எச்சரிப்பீராக. அவருடைய மகளின் கணவர் இரண்டரை ஆண்டுகளுக்குள் இறந்து போவார். இது இறை தீர்ப்பாகும். (ஆயினையே கமாலாத்தே இஸ்லாம் . பக்கம் 572)
இறைவனின் கட்டளைக்கேற்ப தாம் இந்தச் செய்தியை அறிவிப்பதாகவும் தமது சொந்த விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் இதில் இல்லைஎன்றும் இன்னொரு திருமணம் செய்யவேண்டிய எவ்விதத் தேவையும் தமக்கு தற்போது இல்லைஎன்றும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் அச்சமயத்தில் வெளிப்படையாகவே அறிவித்தார்கள் (அறிக்கை 15 ஜூலை 1888)
இது முழுக்க முழுக்க உண்மையென்பதை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் வாழ்க்கையை ஆராயகின்றவர்கள் உணர்ந்துகொள்ளலாம்.
ஹம்ரத் பீபீ என்பவரோடு அவர்களுடைய முதல் திருமணம் நடந்ததென்றாலும் அவர்களுக்கு 21 வயதான பொது அதில் முறிவு ஏற்பட்டது. பின்னர் ஏறத்தாழ 28 ஆண்டுகள் அவர்கள் மணமுடிக்காது வாழ்ந்தார்கள். இக்காலகட்டத்தில் அவர்கள் இல்லற வாழ்க்கைப் பற்றிய எண்ணமே இல்லாது முழுக்க முழுக்க இறைப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அதாவது தமது இளமைப் பருவத்தை இஸ்லாமிய சேவைக்காக அர்ப்பணித்தார்கள். பின்னர் நவாப் மீர் தர்த் என்பவரின் வழித்தோன்றலும் உயர்ந்த பாரம்பரியத்தில் வந்தவருமான ஹஸ்ரத் நுஸ்ரத் ஜஹான் பேகம் அவர்களை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் 1884 இல் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில், நாத்தீக வாதமும் இஸ்லாத்தின் எதிரிகளோடு தொடர்பும் உள்ள ஒரு குடும்பத்தில் பெண் கேட்க, இறை கட்டளையைத் தவிர எந்தக் காரணமும் ஹஸ்ரத் அஹமத் (அலை) அவர்களுக்கு இல்லை என்பதை நியாயஉணர்வுள்ள எவரும் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்த வரலாற்று உண்மையைத் தெரிந்து கொள்ளாது தங்களின் சொந்த மன விகாரங்களை வெளிப்படுத்துகின்ற வகையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீது அருவருக்கத்தக்க அவதூறுகளை பி.ஜே யைப் போன்ற பொய்யர்கள் சிலர் சுமத்துகின்றனர். இது இவர்களின் இறையச்சமற்ற மனப்போக்கையே காட்டுகின்றது. இதனால் இவர்களுக்கு ஏற்படவிருக்கும் சாபங்களையும் இறை தண்டனைகளையும் இவர்கள் உணர்வதில்லை.
முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் செய்த முன்னறிவிப்புகள் நிறைவேறிய விதமும் அந்தக் குடும்பத்தினரே அதற்க்குச் சாட்சிகளாக விளங்கியதும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஓர் உண்மையாளர் என்பதற்கு சான்றுகளாக விளங்குகின்றன.
மேற்கண்ட இறை அறிவிப்பை கேட்ட பிறகும் முகம்மதி பேகத்தின் தந்தையிடம் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. இதன் விளைவாக இறைவனின் சாபம் அவரைத் தொடர்ந்தது. அவரது மகன் மிர்ஸா மஹ்மூத் பேக் ஜூலை1890 இல் அகால மரணமடைந்தார். அடுத்தடுத்து அவருடைய குடும்பத்தில் இறப்புகள் நிகழ்ந்தன.
ஆயினும் அவர் மிகுந்த பிடிவாதத்தோடு தமது மகளை - முகம்மதி பேகத்தை மிர்ஸா சுல்தான் அஹ்மத் என்பவருக்கு மணமுடித்து வைத்தார். இந்தத திருமணம் நடைபெற்று ஆறு மாதங்கள் முடிவடையுமுன் டைபாய்ட் நோய் கண்டு முகம்மதி பேகத்தின் தந்தை இறந்து போனார். இது ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் முன்னறிவித்தபடியே நிகழ்ந்தது.
அடுத்தடுத்து நிகழ்ந்த இறப்புகளைக் கண்ட முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் தமது தவறான போக்கைக் கைவிட்டு பாவ மன்னிப்புத்தேட ஆரம்பித்தார்கள். அது மட்டுமல்ல, அந்த குடும்பத்தைச் சார்ந்த அநேகர், முகம்மதி பேகத்தின் தாயாரும் சகோதரிகளும் உட்பட ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களிடம் "பை அத" செய்து அஹ்மதியா ஜமாத்தில் இணைந்தார்கள்.
"அவர்கள் திருந்தி தங்களைச் சீர்திருத்திக் கொண்டால் நாம் அவர்களிடத்து கருணையுடன் திரும்புவோம்" என்ற இறை அறிவிப்பிற்கு ஏற்ப முகம்மதி பேகத்தின் குடும்பத்திற்கு ஏற்பட்டு வந்த சாபங்கள் நீங்கின. ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள், இறைவன் தங்களுக்குச் சொன்னதாக எவற்றை அறிவித்தார்களோ அவையெல்லாம் அவற்றில் கூறப்பட்டபடியே நிறைவேறின. என்பதற்கு அவற்றோடு தொடர்புடையவர்களே சாட்சி கூறினார்கள். முகம்மதி பேகத்தின் மகன் மிர்ஸா இஸ்ஹாக் பேக், ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் நிறைவேறியது குறித்துக் கூறியிருப்பதைப் பாருங்கள்:
"என்னுடைய பாட்டனார் மிர்ஸா முஹம்மது பேக், முன்னறிவிப்பின் படியே இறந்து போனார். இதற்குப் பின் எஞ்சிய குடும்பத்தினர் பயந்து போய் தங்களைத் திருத்திக் கொண்டார்கள். அவர்களில் அநேகம் பேர் அஹ்மதியத்தில் இணைந்தது, இதற்கொரு மறுக்கயியலாத சான்றாகும் (அல்-பஸல் 1923)
அக்காலத்தில் அஹ்மதியா ஜமாத்தின் மிகப் பெரிய எதிரியாக விளங்கிய அஹ்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் மௌலவி முஹம்மது ஹுசைன் பட்டாலவி கூறியிருப்பதைப் பாருங்கள்:-
"இந்த முன்னறிவிப்புகள் நிறைவேறின ஆனாலும் அவை ஜோதிடமாகும்" (இஷா அத்துஸ் சுன்னா, வால்யும்5)
மௌலவி முஹம்மது ஹுசைன் பட்டாலவி, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு வஹி என்னும் இறையரிவிப்பு வருகிறது என்பதை நம்பாவிட்டாலும் அவர்கள் முகம்மதி பேகம் தொடர்பாக கூறிய முன்னறிவிப்புகள் நிறைவேறின என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
முகம்மதி பேகத்தின் கணவரான மிர்ஸா சுல்தான் முஹம்மது, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பற்றித் தமது கைப்பட எழுதிய ஒரு கடிதம் தஸ்கிஸுள் அஸான் என்னும் எட்டில் மே,1913 இதழில் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது:
"நான் எப்போதுமே மறைந்த மிர்ஸா சாஹிப் அவர்களை நேர்மையான,கண்ணியத்திற்குரிய ஒருவராகவே எண்ணுகிறேன். அவர்கள் ஒரு உன்னதமான ஆன்மாவாகவும் எப்போதும் இறைவனை எண்ணத்தில் கொண்டவருமாவார்கள். நான் அவர்களைப் பின்பற்றுபவர்களை எதிர்க்கின்ற்றவன் அல்ல. சில காரணங்களால் அவர்களுடைய வாழ்நாளில் அவர்களை சந்திக்கின்ற நற்பேறு எனக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது. "அந்த முன்னறிவிப்பின் பொது ஹிந்து ஆரியர்களும், கிருஸ்தவர்களும், லேக்ராம், ஆத்தம் ஆகியோரும் மிர்ஸா சாஹிப் மீது வழக்கு தொடர்ந்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக என்னிடம் சொன்னார்கள். நான் அந்தப் பணத்தைப் பெற்றிருந்தால் பெரும் செல்வந்தனாகி இருப்பேன். ஆனால் அவர்கள் (ஹஸ்ரத் அஹ்மத் (அலை) ) மீது நான் கொண்டிருந்த உயர்வான நம்பிக்கையே என்னை அவ்வாறு செய்ய விடாது தடுத்தது."
" நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் மீது மிக உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. இத்தகையதொரு நம்பிக்கை இருப்பதாக அவர்களைப் பின்பற்றும் உங்களால் கூட வாதிக்க இயலாது என எண்ணுகிறேன்." (அல் - பஸல் 9 ஜூன் 1921)
இவ்வாறு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் கண்ணியத்திற்கும் உண்மைக்கும் அவர்களுடைய முன்னறிவிப்புகள் நிறைவேறியதற்கு முகம்மதி பேகத்தின் குடும்ப அங்கத்தினர்களே சாட்சி கூறியிருக்கும் போது மற்றவர்கள் அதைப் பற்றி கதைக் கட்டுவதைக் காணுகின்றபோது அவர்களை ஷைத்தானின் வாரிசுகள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் மக்களின் மனங்களில் தீய எண்ணங்களை விதைக்கின்றார்கள். அதுமட்டுமல்ல இவர்கள் இமாம் மஹ்தி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) இவர்கள் மூலமாக மக்கள் நேர்வழி பெறுவதற்கு முட்டுக்கட்டையாகயும் நிற்கிறார்கள்.
ஆனால் இவர்களின் எண்ணங்களும், திட்டங்களும் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் இறைத்தூதர்களை எதிர்த்தவர்கள் எக்காலத்திலும் வெற்றிபெறவில்லை. மாறாக இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனார்கள் என்பது வரலாறாகும்