அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இறுதி நபிக் கொள்கையை கைவிட்ட P.ஜைனுலாப்தீன்


ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி, மார்க்கம் முழுமையடைந்து விட்டது இனி எவரும் நபியாக வரமாட்டார், வர வேண்டிய அவசியமில்லை என இதுவரை கூறிவந்த பொய்யன் ஜைனுலாப்தீன் இப்போது நபி(ஸல்) அவர்களின் வாழ்நாளில் நபி வர வாய்ப்பிருந்தது என்ற புதிய கருத்தைக் கூறியிருக்கிறார். அதாவது திருக்குரான் இறுதியாக அருளப்பட்ட நிலையில் இன்னொரு நபி வர வாய்ப்புள்ளது என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒற்றுமை இதழில் திருக்குரானின் மூன்றாவது அதிகாரம் என்பத்தி இரண்டாவது வசனம் மற்றும் முப்பத்தி மூன்றாவது அதிகாரம் எட்டாவது

வசனம் ஆகிய வசனங்களுக்கு விளக்கம் கூறும் பொது அவர் கூறி இருப்பதை பாருங்கள்:

"உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் தந்த பிறகு இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும் என்பதுதான் உடன்படிக்கை"

இத்தகு உடன்படிக்கை ஹஸ்ரத் நபி ஸல் அவர்களிடமும் வாங்கப்பட்டது என்பதை திருக்குரானின் முப்பத்து மூன்றாவது அதிகாரம் எட்டாம் வசனத்தை ஆதாரமாக காட்டி பிஜே. ஒப்புகொள்கிறார். அவர் கூறியிருப்பதை பாருங்கள்:"இவ்வசனத்தில் (33:8) நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அடக்கம் என்பது தெரிய வருகிறது. ஏனெனில் உம்மிடமும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது."

இன்னொரு தூதர் வந்தால் அவரை ஏற்பது தொடர்பான உடன்படிக்கையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் விதிவிலக்கல்ல என்பதை பீ. ஜெ. ஏற்றுக் கொள்கிறார்.

இதன் மூலம் வேதமும் ஞானமும் அருளப்படுவது பிற்காலத்தில் நபிமார்களின் வருகைக்கு தடையாகாது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். அதுமட்டுமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் துணை நபிகள் வருவது சாத்தியமே (ஒற்றுமை பக்கம் 47) என்று கூறுவதன் மூலம் இறுதி வேதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தாலும் இன்னொரு நபி வருவது சாத்தியமே என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

என்றாலும் மக்களைக் குழப்புவதையே தனது தொழிலாகக் கொண்ட பீ.ஜெ. மேற்கண்ட உடன்படிக்கை நபிமார்களுக்கு மட்டுமே உரியது. 'உம்மிடமும்'என்ற சொல் நபிகள் நாயகத்திற்கு மட்டுமே பொருந்தும் என்ற ஓர் அபத்தமான வாதத்தை எடுத்து வைக்கிறார். அதாவது ஒரு நபியின் வாழ்நாளில் இன்னொரு நபி தோன்றினால் அவரை ஏற்பது முன்னால் வந்த நபியின் கடமை என்பதே இந்த உடன்படிக்கை என்கிறார். இந்த விசயத்தில் ஏனைய திருக்குரான் விரிவுரையாளர்களிடமிருந்து பீ.ஜெ. முரண்படுகிறார். இதனை அவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்.

ஒரு நபியின் மூலம் அவரைப் பின்பற்றிய சமுதாயத்திடம், பின்னாளில் வரக்கூடிய நபியை ஏற்று அவருக்கு உதவிட வேண்டுமென்ற உறுதிமொழியை இறைவன் பெற்றான் என்பதே மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு ஏனைய விரிவுரையாளர்கள் தந்துள்ள விளக்கமாகும். ஆனால் பீ.ஜெ. "பல ஆண்டுகளாக அறிஞர்கள் பலர்" தந்த இந்த விளக்கம் தவறானது என்கிறார். உண்மையில் பீ.ஜெ. தந்துள்ள விளக்கமே தவறானதும், அபத்தமானதுமாகும். ஏனெனில், இந்த வசனத்தை (3:82) தொடர்ந்து வரும் வசனம் (3:83) "அந்த உடன்படிக்கைக்கு பின்னரும் புறக்கணித்து விடுகின்றவர்கள் வரம்பு மீறியவர்கள் ஆவர்" என்றுள்ளது. இது நபிமார்களுக்கு பொருந்துமா? இறைவனுடன் செய்த உடன்படிக்கையை நபிமார்கள் நவூதுபில்லாஹ் புறக்கணிப்பார்களா? அப்படி புறக்கணித்து வரம்புமீறுகின்றவர்களாக அவர்கள் ஆவார்களா? அரைகுறையாக படித்துவிட்டு அவசரப் புத்தியோடு பீ.ஜெ. தவறான விளக்கம் தருகிறார்என்பதை இதிலிருந்து எவரும் புரிந்து கொள்ளலாம்.

மறுப்பு என்பது கோணல் புத்திகாரர்களின் குடும்ப சொத்து. அது நபிமார்களின் இயல்பிலேயே இல்லாதது. எனவே திருக்குரானின் (3:82) ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உடன்படிக்கை நபிமார்களின் மூலமாக அவர்களின் சமுதாயங்களிடம் செய்யப்பட்ட உடன்படிக்கையே என்பது மிகச் சரியான விளக்கமாகும்.

'முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்பார்கள். முதலில் குறிப்பிட்ட வசனத்தை கோட்டைவிட்ட பீ.ஜெ. (33:8) ஆம் வசனத்திற்கும் மிகத் தவறான விளக்கமே தருகிறார். இதிலுள்ள உம்மிடமும் என்ற சொல்லைக் குறிப்பிட்டு அது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கே பொருந்தும் என்கிறார். அடுத்து, 'நபிகள் நாயகம் (ஸல்) வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை (நபிமார்களாக) அல்லா நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்ளவேண்டும் ' என்பதையே இந்த வசனம் குறிப்பிடுவதாக இவர் கூறுகிறார். இது எப்படி இருக்கிறது?

எந்த நபிதான் இறைவன் புறமிருந்து தோன்றும் இன்னொரு நபியை மறுப்பார்? அதிலும் இறைவனிடத்திலேயே தம்மை முற்றாக மாய்த்துக் கொண்ட நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இவர் கூறுவது போன்று ஓர் உடன்படிக்கையை இறைவன் செய்திருப்பானா? "அன அவ்வளுள் முஸ்லிமீன்-கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானே முதன்மையானவன் (6:164)என்று கூறப்பட்டுவிட்ட பிறகு இது போன்ற உடன்படிக்கை அவசியம்தானா? உண்மையில் இது அபத்தத்தின் எல்ல்லையாகும். இத்தகு மட்டமான விளக்கங்களிலிருந்து மக்களை இறைவன் காப்பாற்றுவானாக.

நபியிடம் கூறப்படுவது அவருடைய சமுதாயத்திர்க்குரியதே என்பதற்கு பல சான்றுகள் திருக்குரானில் காணப்படுகின்றன. மேற்கோளாக சிலவற்றை இங்கு காண்போம்.

"நபியே, நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு கொடுக்கும் போது, குறிப்பிட்ட காலவரைக் கேற்ப அவர்களுக்கு மணவிலக்கு கொடுத்து அந்த காலவரையைக் கணித்துக் கொள்ளுங்கள்..."(65:2)...."

இங்கு பொதுவான ஒரு சட்டம் நபியை நோக்கி கூறப்பட்டிருக்கிறது. இது நபிக்கு மட்டுமே உரியது என்று கூற முடியுமா?

எனவே நீர் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் அவர்களுக்கு உரியதை கொடுப்பீராக...(30:39)

இதிலும் நபியை நோக்கியே கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இளமைக் காலத்திலேயே உறவினர்களுக்கு மதிப்பளிப்பவர்களாக ஏழைகளுக்கு இறந்குபவர்களாக வழிப்போக்கர்களுக்கு ஆதரவளிப்பவர்களாக விளங்கினார்கள் என்பது வரலாற்று உண்மை. இந்த நிலையில் அவர்களிடம் மேற்கண்டவாறு கூற வேண்டிய அவசியமில்லை. எனவே நபியை நோக்கி கூறப்பட்டிருந்தாலும் நபியைக் பின்பற்றியவர்களுக்கே இந்தக் கட்டளை எனப் புரிந்து கொள்ள வேண்டும் .ஒரு கட்டளை நபிக்கு மட்டுமே உரியது என்றால் அதனை இறைவன் தெளிவாகக் குறிப்பிடுவான். மேற்கோளாக திருக்குரானில் (33:51) ஆம் வசனத்தில் திருமண விசயத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குக் தரப்பட்ட அனுமதிகளைப் பற்றி குரிப்பிட்டபிறகு,'இந்தக் கட்டளை உமக்கு மட்டுமே ஆகும்' என இறைவன் குறிப்பிடுகின்றான்.

எனவே 3:82 ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்ட உறுதிமொழி நபிமார்கள் மூலமாக அவர்களின் சமுதாயத்திடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியே. அதே போல் 33:8 ஆம் திருக்குர்ஆன் வசனத்தில் காணப்படும் உடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்களுடைய சமுதாயமும் அந்த உடன்படிக்கையில் அடங்கும். அதாவது அந்த உடன்படிக்கை முஸ்லிம் களையும் கட்டுப்படுத்தும்.

எனவே நபி வந்தால் அவரை ஏற்பது முஸ்லிம் சமுதாயத்தின் மீது கட்டாயக் கடமையாகும். ஏனெனில், அது இறைவனோடு செய்யப்பட்ட 'கட்டாய உடன்படிக்கை' ஆகும். எந்நிலையிலும் அதனை அலட்சியப் படுத்தமுடியாத அளவுக்கு அந்த உடன்படிக்கைக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு மாறு செய்தால் இந்தச் சமுதாயம் 'பாசிகீன்' - அதாவது வரம்பு மீறிய சமுதாயமாக ஆகிவிடும் என்ற எச்சரிக்கையும் 3:83 ஆம் வசனத்தில் விடுக்கப்பட்டுள்ளது.

இன்னுமொரு விசயத்தையும் இங்கு கூறியாக வேண்டும். கோவையில் நடைபெற்ற 'முனாழராவின்' போது 'காத்தமுன் நபியீன்' என்ற சொற்றொடருக்கு தருகின்ற சரியான கருத்தை மறுப்பதற்கு பீ. ஜே. இடமிருந்த ஒரே சான்று ஓர் உம்மத்திற்கு ஒரு நபிதான் என்ற கூற்றே ஆகும். ஆனால் இப்போது அந்த வாதத்தை அவரே மறுத்து ஓர் உம்மத்தில் பல நபி வர முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறார்.அதற்க்கு ஆதாரமாக 36:14 ஆம் வசனத்தையும் எடுத்து வைக்கிறார். அது மட்டுமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்திலும் நபி வந்திருக்கலாம் என்கிறார். குழப்பமும் முரண்பாடும் இவர் கூடப் பிறந்தவை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு!
கருணையுள்ள இறைவன் குழப்பவாதிகளான முல்லாக்களின் குளறுபடியான குதர்க்கமான கூற்றுகளிளிருந்து முஸ்லிம் சமுதாயத்தை காத்து அதனை நேரான வழியில் நடத்துவானாக?