அந்நஜாத் அக்டோபர் 2010 இதழில் அதன் ஆசிரியர் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தைப் பற்றி, 'அவர்கள் செல்வது நேர்வழி அல்ல; கோணல் வழிகளில் ஒன்றே என்பது குரான், ஹதீஸை எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி விளங்குகின்றவர்கள் அறிய முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதற்க்கு அவர் எடுத்து வைத்திருக்கும் சான்று, மார்க்கம் முழுமையடைந்துவிட்டது; அதில் புதிதாக சேர்க்க ஒன்றுமே இல்லை. (5:3) அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் 1431 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமைப் படுத்தப் பட்ட அந்த மார்க்கம் மட்டுமே (3:19) ஆகியையாகும்.
இவ்விரு வசனங்களின் படி இனி இறைவனிடமிருந்து எந்த நபியும் தோன்ற முடியாது என்றால் ஈஸா நபியின் வருகையை அவர் எப்படி எதிர்பார்த்திருக்கிறார்.? இந்த மார்க்கத்தில் ஒன்றுமே புதிதாக சேர்க்க ஒன்றுமே இல்லை என எழுதும் அவர் ஈஸா நபி அவர்களை எதற்க்காக எதிர்பார்க்கிறார்? 1431 ஆண்டுகளுக்கு முன்னறே முழுமைப்படுத்தப்பட்ட அந்த மார்க்கத்தில் ஈஸா நபி தன் நபிப் பதவியை இழந்து வந்து நிற்க வேண்டிய தேவை என்ன?
நஜாத் பிரிவினர் என மக்களால் அறியப்படும் இவர்கள், பிற முஸ்லிம்களிடம் காணப்படும் சில ஷிர்க்கான, பித்தத்தான கொள்கைகளை விட்டு விலகியிருந்தாலும் ஈஸா (அலை) அவர்களுக்கு இறைத்தன்மையை கொடுப்பதில் கிறிஸ்தவர்களிடமும், பிற முஸ்லிம்களிடமும் காணப்படும் அதே ஷிர்க்கான கொகைகளைக் கொண்டிருக்கின்றார்கள். அபூ அப்தில்லாஹ் சாஹிப் பாணியில் சொல்லப்போனால், அந்த வகையில் இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.
ஈஸா (அலை) அவர்கள் உண்ணாமல் கடந்த 2000 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறார் என்ற இந்தக் கிறித்தவக் கொள்கையை திருக்குர்ஆன் முற்றிலுமாக மறுக்கிறது!
"நாம் (தூதர்களாகிய) அவர்களுக்கு உணவு உண்ணாத உடலை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட காலம் வாழ்ந்ததுமில்லை." (21:9)
இந்த வசனத்தின்படி ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை இறைதூதராக நம்பும் எந்த முஸ்லிமும் உணவு உண்ணாத உடலை அவருக்கு வழங்கியதாக நம்பமாட்டார். அவ்வாறு நம்பினால் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஓர் அசாதாரணமான பண்பு அவருக்கு இருப்பதாக கிறித்தவர்களைப் போன்று அவரும் நம்புகிறார் என்று பொருள்
அடுத்து 'நபி(ஸல்) அவர்கள் இறந்து ஈஸா(அலை) அவர்கள் எப்படி உயிரோடு இருக்கமுடியும் போன்ற காதியானிகளின் வாதமெல்லாம் அறிவு குறைந்த மக்களை மாற்றும் தந்திரமே அன்றி யதார்த்தம் அல்ல' என நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டுகிறார்.
"உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நீண்ட நெடுங்காலம் வாழும் வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து அவர்கள் மட்டும் நீண்ட நெடுங்காலம் வாழ்வதா? (21:35)
மேற்கண்ட வசனத்தின் மூலம் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணித்து அன்னாருக்கு முன்னர் தோன்றிய ஈஸா நபி (அலை) எப்படி உயிரோடு இருக்க முடியும் என்ற கேள்வி அறிவு குறைந்த மக்களை ஏமாற்றும் தந்திரமல்ல. மாறாக யதார்த்தமே என்பதை அல்லாஹ் நமக்குப் புரிய வைத்துள்ளான். மார்க்கத்தை அதன் தூய விடிவில் எடுத்துரைப்பவர்கள் என மார்தட்டும் நஜாத் பத்திரிகையை சார்ந்தவர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
21:9 வசனத்தில் இறைத்தூதர்களுக்கான விதிமுறைகளையும் 21:35 வசனத்தில் மனிதர்களுக்கான விதிமுறைகளையும் எடுத்துக் கூறி இறைவன் விளக்கியிருக்கும் போது, ஈஸா நபி (அலை) வானத்தில் உயிருடன் உணவு உண்ணாமல் வாழ்ந்து வருகிறார் என்று நம்புவது அவருக்கு மனிதனுக்கும் இறைதூதருக்கும் அப்பாற்பட்ட ஒரு அந்தஸ்த்தைக் கொடுப்பதாகிவிடும். மேலும் அது தவ்ஹீதுக்கு மாற்றமான, ஷிர்க்கான கிறிஸ்தவக் கொள்கையாகும்.
நபியின் அந்தஸ்தில் உயர்த்தப்பட்ட ஈஸா (அலை) எதற்க்காக நபிப்பதவியை இழந்தார்? ஒரு நபிக்கு நபிப்பதவி வழங்கப்பட்டு அதனை அவரிடம் இருந்து பறித்ததாக மார்க்க வரலாறு உண்டா? அல்லாஹ்வின் நடைமுறை ஏதாவது இருக்கிறதா? வானத்திற்கு ஏறிச்சென்றது, உணவு உண்ணாத உடலை கொண்டிருப்பது, இறந்தவர்களை உயிர்ப்பித்தது போன்ற விஷயங்களிலெல்லாம் ஈஸா நபிக்கு மட்டும்தான் இவர்கள் தனிச்சிறப்பை வழங்குகின்றனர்.
இவ்வாறு கிறிஸ்தவர்கள் மற்றும் பிற முஸ்லிம்களைப் போன்றே இவர்களிடமும் ஈஸா நபி(அலை) அவர்கள் விஷயத்தில் மட்டும் பல நூதனமான கொள்கைகள் மலிந்து காணப்படுகின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஓர் உதாரணத்தை எடுத்து வைக்கின்றோம். அந்நஜாத் ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:
'..... இறைந்தவர்களை உயிர்பித்தது இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியது, இவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே என்று உறுதியாக நம்புவது ஈமானில் உள்ளதாகும்.' (அந்நஜாத் அக்டோபர் 2010 பக்கம் 18)
ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி, உஹ்யில் மௌத்தா பி இஸ்நிஹி (அவன் கட்டளையினால் நான் இறந்தவர்களை உயிர்பிக்கின்றேன் எனவும் (3:50),நீர் உயிரற்றவர்களை என் கட்டளையினால் எழுப்பிய நேரத்தையும் எனவும் (5:11) திருக்குரானில் உள்ள வசனத்திற்கு நேரடியான வெளிப்படையான பொருளைக் கொடுக்கின்றனர். பௌதீகமாக, உடல் அளவில் உயிரூட்டினார் என்று நம்பி இறைவனுக்கு இணை வைக்கின்றனர். ஏனெனில் படைத்தல், மரணிக்கசெய்தல், உயிரூட்டுதல் ஆகிய பண்புகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்றும், இணையாக்கப்பட்டவர்களுள் எவராலும் இதனை செய்ய முடியாது என்று இறைவன் திருக்குரானில் திட்டவட்டமாக குறிப்பிடுகின்றான்.
"அல்லாஹ்வே உங்களைப் படைத்தான் அவனே உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் அவன் உங்களை உயிரூட்டுவான் உங்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களில் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றனரா? அவன் தூய்மையானவன். மேலும் அவர்கள் (இறைவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன்." (30:41)
மக்களால் இறைவனுக்கு இணையாக்கப்பட்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ஈஸா (அலை) அவர்கள்தான். இணையாக்கப்பட்டவர்களில் எவருமே உயிரூட்டுவதில்லை என்று அல்லாஹ் குறிப்பிடும்போது அது மிக அதிகமாக ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்குதான் பொருந்துகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.
எனவே திருக்குர்ஆன் 3:50 ல் நான் இறந்தவர்களை உயிர்பிக்கின்றேன் என்று ஈஸா (அலை) அவர்கள் கூறியதாக வந்திருப்பது அவர் பௌதீகமாக இறந்தவர்களை உயிர்பித்தார் என்று பொருள் கொள்ள முடியாது. அது மேற்கண்ட 30:41 வசனத்திற்கு முரணானது. ஈசாவுக்கு இறைத்தன்மையைக் கொடுப்பதாகிவிடும். இந்த வகையில் ஜமாஅத் அல் முஸ்லிமீன் என தம்பட்டம் அடிக்கும் பிரிவினருக்கு கிடைக்கும் பட்டம் முஷ்ரிக் என்றே ஆகிவிடும்!
இதே சொல்லை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகவும் அல்லாஹ் திருக்குரானில் இவ்வாறு கூறியிருக்கிறான்.
"நம்பிக்கை கொண்டவர்களே! இறைதூதர் உங்களை உயிர்பிப்பதற்க்காக உங்களை அழைத்தால் நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவருக்கும் பதில் அளியுங்கள்." (8:25)
இவ்வசனத்தில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்காகவும் உயிர்பித்தல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசனத்திற்கு எவருமே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் பௌதீகமான முறையில் இறந்தவர்களை உயிரூட்டி எழுப்பினார்கள் என்று பொருள் கொள்வதில்லை. மாறாக ஆன்மீகமான முறையில் உயிரற்றோருக்குதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உயிர் கொடுத்தார்கள் என்றே விரிவுரையாளர்கள் எழுதியுள்ளனர். 'உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் உங்களை அலைக்கும் போது அவருக்கு பதிலளியுங்கள்' என p.j யும் மொழியாக்கம் செய்துள்ளார். ஆனால் இதே சொல் ஈஸா(அலை) அவர்களுக்காக வரும் போது மட்டும் உண்மையிலேயே இறைந்தவர்களுக்கு உயிரூட்டினார் எனக் கூறி ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு இறைத்தன்மையை கொடுத்து கிறிஸ்தவர்களின் தவறான கடவுள் கொள்கைக்கு ஆதரவளிக்கின்றனர்.
சுன்னத் ஜமாஅத்தினரை விட காதியானிகள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள், காரணம், சுன்னத் ஜமாஅத்தினர் இறைவனால் மன்னிக்கவேபடாத ஷிர்க்கை செய்கின்றனர் என அவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் இவர்கள் முதலில் தாமும் ஷிர்க்கில் தான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்பதே என்பதே எமது அவாவும் துவாவுமாகும்.
ஆக ஒரே சொல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி வரும்போது அதற்க்கு ஆன்மீகமாக உயிரூட்டுதல் என்பதுதான் பொருள் என்பதை விளங்கிய இவர்களால் ஈஸா (அலை) அவர்களுக்காக அதே சொல் வரும்போது உடல் ரீதியாக உயிரூட்டினார். என்று பொருள் கொள்பவர்கள்தான் 'திரித்து வளைத்து சுயவிளக்கம் கொடுத்து வழிகெடுக்கின்றார்கள்' என்பதை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் உணர்ந்தவர்களால் புரியாமல் இருக்க முடியாது. அந்நஜாத் பத்திரிகையை கண்மூடித்தனமாக தக்லீது செய்பவர்களால் புரியாமர்போனத்தில் வியப்பேதும் இல்லை.
ஈஸப்னு மர்யம் இறங்குவார் என்ற சொல் ஹதீஸில் வருவதனால் அதில் வானம் என்ற சொல்லையும் சுயமாக சேர்த்து வானத்திலிருந்து இறங்குவார் என்று பொருள் கொடுப்பதன் மூலம் பிற முஸ்லிம்களைப் போன்றே ஜமாத்துல் முஸ்லிமீன் வாதிகளும் ஷிர்க்கில் தான் இருக்கின்றனர். நூஸுல் (இறங்குதல்) என்ற இதே சொல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காக திருக்குரானில் இவ்வாறு வருகிறது.
"நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்டக்கூடிய ஒரு தூதரை இறக்கியுள்ளான்." (65:11-12) இங்கே அவர்கள் வானத்திலிருந்து இறங்கினார்கள் என பொருள் கொடுக்காத இவர்கள் ஈஸா (அலை) விஷயத்தில் மட்டும் வானத்திலிருந்து இறங்குவார் என பொருள் கொடுப்பதும். ஈஸா (அலை) அவர்களுக்கு மட்டும் கிறிஸ்தவர்களைப் போன்று தனித்தன்மையை உருவாக்க முயல்வதும்தான் திரித்து வளைத்து சுயவிளக்கம் கொடுப்பதாகும் என்ற உண்மையை தமிழன் tv யில் நமது நிகழ்ச்சியை பார்த்த பலர் புரிந்து கொண்டனர்!
மாறாக அல்லாஹ் அவரை (அதாவது ஈஸாவை) தன்னளவில் உயர்த்தினான் (4:159) என்ற வசனத்தில் உயர்த்துதல் என்பதற்கு அப்படியே நேரடியான, வெளிப்படையான பொருளை கொடுத்து ஈஸாவுக்கு தனிச்சிறப்பை காட்ட முனைவதில் ஜமாத்துல் முஸ்லிமீன் வாதிகளும் இனைவைப்பவர்களே! இறைவன் ஒருவரை உயர்த்தினான் என்று சொன்னால் அரபி மொழி சொல் வழக்கின்படி அவருடைய அந்தஸ்தை உயர்த்தினான். என்றுதான் பொருளே தவிர உடலோடு உயர்த்தினான் என்ற பொருள் அல்ல. இதனை திரித்து வளைத்து சுயவிளக்கம் கொடுக்காதவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
:"மேலும் நாம் அவரை (இத்ரீஸை) ஓர் உயர்வான இடத்திற்கு உயர்த்தினோம்." (19:58)
நாம் விரும்பியிருந்தால் அதன் மூலம் நாம் அவரை உயர்த்தியிருப்போம். ஆனால் அவர் பூமியின் பக்கம் சாய்ந்துவிட்டார்.(7:177)
7:177 வசனத்தில் உயர்த்தியிருப்போம் என்பது மட்டுமல்லாது (வானத்திற்கு எதிர்சொல்லான) பூமியின் பக்கம் அவர் சாய்ந்துவிட்டார். என்று குறிப்பிடப்பட்டிருந்தும் எவரும் அதற்க்கு அல்லாஹ் அவரை வானத்திற்கு உயர்த்த விரும்பினான் என்று பொருள் கொள்வதில்லை. ஈஸா நபிக்கு மட்டும் ஏன் இந்த தனிச்சிறப்பு? என்பதே நம் கேள்வி.
அடுத்து 'அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களை தன்னளவில் உயர்த்தி இறுதி நாள் வரை உயிரோடு வைத்திருப்பது அல்லாஹ்வின் வல்லமைக்கு இயலாத சாத்தியமில்லாத ஒன்றல்ல? என அபூ அப்தில்லாஹ் குறிப்பிட்டிருக்கிறார். (நஜாத் அக்டோபர் 2010 பக்கம் 18)
கடவுளுக்கு வல்லமை உள்ளது என்றால் அவனுக்கு பொய் சொல்ல வல்லமை உள்ளதா என நத்திர்கர்கள் கேட்பது போன்று அபூஅப்தில்லாஹ் சாஹிபின் கேள்வி இருக்கிறது! இது ஓர் அப்துல்லாஹ்வின் (அல்லாஹ்வின் அடியாரின்) கேள்வியாக இருக்க முடியாது. காரணம், அல்லாஹ்வுக்கு சாத்தியமுள்ளது எனபது வேறு: அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கு மாறுபட்டது என்பது வேறு. இவ்விரண்டையும் பிரித்துணர்ந்தவர்தான் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார்) என்பதை அபூ அப்தில்லாஹ் திருக்குரானின் ஒளியில் புரியத் தவறிவிட்டார். குரான், ஹதீஸை எவ்வித சுயவிளக்கமும் இல்லாமல் உள்ளாது உள்ளபடி உணர்கிறோம் என்று வாதம் புரிய முடிபவரால் இதை ஏன் புரியமுடியாமற் போய்விட்டது? என்பதை நினைக்கும் போது நாம் அவருக்காக பரிதாபப்படுகிறோம்.
மக்கத்து காபிர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டனர்:
"நீங்கள் வானத்திற்கு ஏறிச் செல்லவண்டும் நாங்கள் படிக்கத்தக்க ஒரு நூலை எங்களுக்குக் கொண்டுவராதவரை நீர் வானத்திற்கு ஏறிச்சென்றதையும் நாங்கள் நம்ப மாட்டோம் (என அவர்கள் கூறினர்). நீர் கூறுவீராக : என் இறைவன் தூயவன்: நான் ஒரு மனிதராகிய ஒரு தூதரேயன்றி வேறில்லை." (17:94)
வானத்திற்கு உயர்த்திச் செல்லுதல் என்பது அபூ அப்தில்லாஹ் சாஹிப் எழுதியிருப்பது போன்று 'இறைவனின் வல்லமைக்கு இயலாத, சாத்தியமில்லாத ஒன்று' என்பதனால் அன்று என்பதை அன்றே அல்லாஹ் விளக்கிவிட்டான். மாறாக அவ்வாறு செய்வது இறைவைனின் பரிசுத்ததன்மைக்கு மாறுபட்டது என்பதனால் ஆகும். அது இறைவனின் சுன்னத்திற்கு - நடைமுறைக்கு மாறுபட்டது என்பதனால் ஆகும். மேலும் அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். என்று அல்லாஹ்வே திருக்குரானில் குறிப்பிடுகின்றான். (பார்க்க : 17:78; 33::63; 35:44)
மௌலவி p.j. சாஹிபும் இவ்வசனத்தில் வந்துள்ள சுப்ஹான் என்ற சொல்லின் விளக்கவுரையில் இக்கருத்தை ஆமோதித்தவாறு இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"சுப்ஹான் என்றால் தூய்மை என்பது பொருள். நாம் தமிழில் பயன்படுத்தும் தூய்மை என்ற சொல், அழுக்கு, அசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்கும். ஆனால் சுப்ஹான் அதைவிட ஆழமான அர்த்தம் கொண்ட சொல்லாகும். கடவுள் தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன் என்பதே சுப்ஹான் என்பதன் பொருளாகும்." (p.j. திருக்குர்ஆன் தமிழாக்கம் அடிக்குறிப்பு எண்: 10 பக்கம் 959)
"காதியானிகளின் கூற்றுப்படி, ஈஸா (அலை) உயிருக்கு பயந்து, தனது தூதுத்துவ பணியைக் கைவிட்டு அல்லது மறந்து காஷ்மீருக்குத தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிப்போய் ....' என கொச்சைப்படுத்தி எழுதியிருக்கும் அபூ அப்தில்லாஹ் சாஹிப் தனது நம்பிக்கைப்படி, ஈஸா நபி (அலை) அவர்களை எந்த இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்? 4:158 வசனத்தை தவறாகப் புரிந்துகொண்டு யூதர்களின் ஒருவருக்கே ஈஸா நபியின் உருவம் தரப்பட்டது. அவர்கள் அவனை பிடித்து சிலுவையில் அறைந்தனர். இவ்வாறு இறைவன் ஆள்மாறாட்டம் செய்து தன் பக்கம் உடலளவில் அப்படியே உயர தூக்கிக் கொண்டான் என்றும், கடந்த 2000 ஆண்டு காலமாக ஈஸா நபி தனது தூதுத்துவப் பணியைக் கைவிட்டு அல்லது மறந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வானத்தில் சென்று அமர்ந்து கொண்டார் என கொச்சைப்படுத்தி தானே நம்பி வருகிறார்! 21:9, 21:35 வசனங்களுக்கு முரணாக உணவு உண்ணாமல் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறார் என்று தானே நம்புகிறார்? இயேசு கர்த்தரின் வலது பாரிசத்தில் சென்று அமர்ந்து கொண்டார்; உண்ணாமல் உறங்காமல் இன்று வரை உயிருடன் இருக்கிறார் என்ற கிறித்தவர்களின் கொள்கைக்கும் இவர்களின் கொள்கைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
இவர்களின் நம்பிக்கைப்படியும் ஈஸா நபி 2000 ஆண்டுகளாக தூதுத்த்வப் பனி புரியாமல் சும்மாதானே உட்க்கார்ந்து கொண்டு இருக்கிறார்? திரும்பி வரும்போது அவர் நபி பதவியுடன் வருவாரென்று நம்பினாலாவது, இடையில் 2000 ஆண்டுகள் சும்மா இருந்ததை நியாயமாகக் கொள்ள இடமுண்டு. வருபவர் பாவம் நபிப் பதவியையும் இழந்துவிட்டு வந்து நிற்பார் என்று நம்பும் இவர்களை நினைக்கும்போது மிக பரிதாபமாக இருக்கிறது!
இதில் வேடிக்கை என்னவென்றால் நபி பதவியை இழந்து விட்டு வருவார் என்ற இவர்களின் சுய விளக்கத்திற்கு எவ்வித சஹீஹான ஹதீஸ் சான்றும் இல்லை என்பது மட்டுமல்லாமல் அதற்க்கு நேர்மாற்றமாக, வரும் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நபியுல்லாஹ் (அல்லாஹ்வின் நபியாக இருப்பார்) அன்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். முஸ்லிமில் உள்ள நபிமொழியில் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி 4 முறை நபியுல்லாஹ் (அல்லாஹ்வின் நபி) என ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது அதை மறுப்பவர்களை நாம் எந்த சொல்லால் குறிப்பிடுவது?
இந்த ஹதீஸை சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நாம் அபூஅப்தில்லாஹ் சாஹிபின் வீட்டிற்கு சென்று கருத்துபரிமாற்றம் செய்தபோது எடுத்து வைத்தோம். நபி மொழியைப் படித்து பார்த்து விட்டு. பரிசீலிக்க வேண்டியது என்றார். இன்றுவரை பரிசீலித்துக் கொண்டே இருக்கிறார். பதில் இல்லை.
வருகின்ற ஈஸாவை அல்லாஹ்வின் தூதர் என்று ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறிய பிறகு அப்பதவியை அவரிடமிருந்து பறிப்பதற்காக என்ன பரிசீலனை வேண்டிக்கிடக்கிறது?
ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனக்கும் அவருக்கும், அதாவது ஈசாவிற்கும் இடையில் எந்த நபியுமில்லை".(அபூதாவூத், கிதாபுல் மலாஹிம். பாபு. குருஜுத் தஜ்ஜால்)
மேற்கண்ட இரண்டு நபிமொழிகளிலும், வருகின்ற ஈஸாவை அல்லாஹ்வின் நபி என்று ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும் நிலையில். திருக்குரானில் வழி கெட்ட கொள்கை என இறைவனால் எச்சரிக்கை செய்யப்பட்ட கடைசி நபிக் கொள்கையை(அது பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை பார்ப்போம்) இவர்களும் கொண்டிருப்பதால் மேற்கண்ட நபிமொழிகளுக்கு மாற்றமாக ஈஸா நபியிடமிருந்து நுபுவத்தைப் பறிக்கும் கட்டாய நிலை பிற முஸ்லிம் பிரிவினர்களைப் போல இவர்களுக்கும் இருக்கிறது! புது ஷரியத்தோ , உம்மத்தோ இல்லாத நபி வரமுடியும் என்ற இஸ்லாமியக் கொள்கையை டம்மி நபி என கிண்டல் அடிக்கும் இவர் ஈஸாவையும் டம்மி நபியாகத்தானே கிண்டலடித்துள்ளார்.