அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஆதம் நபி முதல் மனிதரா?


ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களே உலகில் தோன்றிய முதல் மனிதர் என முஸ்லிம்களில் பெரும்பாலாரும் கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். ஆதம் நபி முதல் மனிதெரென்று பைபிளில் கூறப்பட்டிருக்கிறதோ இல்லையோ திருக்குரானிலோ நபிமொழிகளிலோ அவ்வாறு கூறப்படவே இல்லை. எனவே ஆதம் நபி முதல் மனிதர் என்ற தவறான நம்பிக்கை, ஈஸா(அலை) அவர்களைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் போன்று கிறிஸ்தவர்களிடம் இருந்து இந்த முஸ்லிம்களுக்குத் தொற்றியிருக்க வேண்டும்.

திருக்குரானில் 2:31 ஆம் வசனத்தில் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைக்

'கலீபா' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 'கலீபா' என்ற சொல், பிரதிநிதி, பின்தொடருபவர், தலைவர், ஆட்சியாளர் என்று பொருள்படும். மக்கள் இருந்தால்தான் பிரதிநிதியை, தலைவரை, ஆட்சியாளரை நியமிக்க முடியும். கலீபா என குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்களுக்கு முன்பே இவ்வுலகில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று புலனாகிறது.

அடுத்து திருக்குர்ஆன் 7:12 இல் "நிச்சயமாக நாம் உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் வானவர்களிடம் ஆதமுக்குக் கீழ்படியுங்கள் என்றோம்',...... என்று காணப்படுகிறது. இந்த வசனத்தில் "உங்களைப் படைத்தோம்" "உங்களை வடிவமைத்தோம்" எனக் குறிப்பிட்டிருப்பது மனித இனத்தையேயாகும். இமாம் ராகிபு (ரஹ்) அவர்கள் தமது 'முப்ரதாத்எனும் நூலில், 'உங்களை வடிவமைத்தோம்' என்ற வசனத்திற்கு மனிதனுக்கு அறிவும் சிந்தனைத்திறனும் அளிக்கப்பட்டதையே இது குறிக்கும் என விளக்கம் தந்துள்ளார்கள். இதன் அடிப்படையில், இறைவன் மக்களை முதலில் படைதான், பின்னர் அறிவையும் சிந்தனைத் திறனையும் அவர்களுக்கு வழங்கினான். அதன் பிறகே ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைத் தனது பிரதிநிதியாக நியமித்தான் என்பது திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கமாகும்.

திருக்குர்ஆன் 2:37 இல் இறைவன் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களை நோக்கி "உங்களுள் சிலர் சிலருக்குப் பகைவராகி விட்டீர்கள்" எனக் கூறுகின்றான். இதிலிருந்து ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களும் அவர்களுடைய மனைவியும் மட்டுமல்லாமல் வேறு மக்களும் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

அண்மைக்கால ஆய்வுகளின்படி மனிதஇனத்தில் வயது பத்து லட்சம் ஆண்டுகளாகும். (என்சைக்ளோபிடியா பிரிட்டானிக 14 ஆம் பதிப்பு) இதிலிருந்து 6000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கூறப்படும் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் முதல் மனிதராக இருக்க வாய்ப்பில்லை. எனவே. திருக்குரானின் அடிப்படையிலும் நவீன ஆய்வுகளின் அடிப்படையிலும் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் முதல் மனிதர் என்ற முஸ்லிம், கிறிஸ்தவ நம்பிக்கை அடித்தளமற்றது என திட்டவட்டமாகக் கூறலாம்.

இது தொடர்பாக, அஹ்மதிய்யா முஸ்லிம் ஜாமத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்கள்.

"ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் தோன்றிய நாளிலிருந்து உலகம் ஆரம்பமாகியது என்ற பைபிளின் கூற்றை நாம் ஏற்கவில்லை அதற்க்கு முன்னால் ஒன்றுமே இருக்கவில்லை. இறைவன் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தான் என்று நாங்கள் நம்பத் தயாராக இல்லை. இன்று உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவருமே ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகள் என்று நம்புவதற்கும் நாம் தயாராக இல்லை. இதற்க்கு மாறாக இந்த ஆதம் நபி முதல் மனிதர் அல்ல என்று நாம் கூறுவோம். அவருக்கு முன்னாலும் மனித இனம் உலகில் இருந்தது இதனைத் திருக்குர்ஆன் உறுதிப்படுத்துகிறது. 'நான் எனது கலீபாவை உலகில் ஏற்படுத்தப் போகிறேன்' என இறைவன் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைக் குறித்துக் கூறுகின்றான். 'கலீபா' என்பது பின்தொடருபவரைக் குறிக்கும். இதிலிருந்து ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களுக்கு முன்னாலும் இவ்வுலகில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது" (அல்-ஹகம் மே 30, 1908 இதழ்)

ஆதம் நபியின் மனைவி

இறைவன் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைப் படைத்த பின் ஹவ்வா எனும் அவர்களின் மனைவியை அவர்களின் விலா எலும்பிலிருந்து படைத்ததாகவும் ஒரு கதை நிலவுகிறது இதுவும் அடிப்படையற்றதாகும்.

"பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். நிச்சயமாக விலா எலும்பின் மிகக் கோணலானப் பகுதி அதன் உயர்ந்த பகுதியாகும். நீங்கள் அதை நேராக்க முயன்றால் அது உடைந்து விடும்." (புகாரி - நிக்காஹ் அதிகாரம்)

பெண்களுக்கு நற்போதனை செய்யுங்கள் ஏனெனில் பெண்கள் வளைந்த எழும்பினால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். (முஸ்லிம் - பாகம், 2)

ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா படைக்கப்பட்டார்கள் என்ற தவறான கருத்து மேற்கண்ட நபிமொழிகளைத் தவறாகப் புரிந்து கொண்டதால் உருவாகியிருக்கலாம். ஆனால், இந்த நபிமொழிகளில் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் பற்றியோ அவர்களின் மனைவி பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை. இந்த நபிமொழிகளுக்கு சொற்பொருள் தந்தால், பெண்கள் எல்லோருமே விலா எலும்பால் படைக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிவரும். உண்மையில், பெண்களிடத்தில் கோணலான தன்மை இயல்பாகவே இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டவே இந்த நபிமொழிகளில் விலா எலும்பு உருவகமாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த நபிமொழிகளை கருத்தூன்றிப் படித்தால் இதனைப் புரிந்து கொள்ளலாம்.