உலகில் தோன்றிய எந்த சமயம் எதுவும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. குறைகளற்ற இறைமார்க்கமான இஸ்லாத்தில் பயங்கரவாததிற்கு அறவே இடமில்லை. அது மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு பதிலடியாக போது மன்னிப்பையும், கருணையையும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள், தமது அன்பு மகளை கீழே தள்ளி அவளுடைய அகால மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிக்கும் தமது உற்ற தோழரின் உடலைக்கிழித்து அவருடைய ஈரலைக் கடித்து துப்பிய பயங்கரவாதிக்கும் இன்னும் தமக்கும் தம்மைச் தார்ந்தவர்களுக்கும், கொடுமைகள் பல இழைத்த கொடியவர்களுக்கும் பொது மன்னிப்பை வழங்கியதன் மூலம்
பயங்கரவாதத்தை அன்பால், அரவணைப்பால், மன்னிக்கும் மனோபாவத்தால் வென்றிட முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் போர்கள் பலவற்றைக் கண்டிருந்தாலும் அவையாவும் தற்காப்பு நடவடிக்கையாகவும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கின்ற களங்களாகவும் இருந்திருக்கின்றன. அப்பாவி மக்களும் ஆலயங்களும், மடங்களும் அவர்களின் இலக்குகளாக எப்போதும் இருந்ததில்லை.
ஆனால், இன்று பயங்கரவாதத்திற்கு இஸ்லாமிய முலாம் பூசப்படுகிறது. இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இதில் பங்கிருந்தாலும் முஸ்லிம்களின் சிறுபகுதியினர் பயங்கரவாதத்திற்கு துணை போயிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. மனித நேயத்தை பெரிதும் மதிக்கின்ற ஒரு மார்க்கத்தை சார்ந்த இவர்கள், பயங்கரவாதப் படுகுழியில் விழக் காரணமானவர்கள் யார்?
மாறுபட்ட சமயக் கருத்து கொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் கொடுமைகளுக்கு இலக்காவது வரலாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஒன்று, இந்தக் கொடுமைகளுக்கும் பயங்கரவாதத்திற்க்கும் அடிகோலியவர்கள் சீர் கெட்ட மதக் குருமார்களே! மாற்றுக் கருத்துக் கூறியதற்காக மக்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்க்கு காரண கர்த்தாக்கள் புரோகிதர்களே! இயேசுவை சிலுவையில் அறைந்து பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர்கள் யூத மதப் பண்டிதர்களே! இவர்களின் வழியில் இஸ்லாத்தின் பெயரால், அல்லாஹ்வின் பெயரால் அராஜகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் அடித்தளம் அமைத்தவர்கள் பெயர்தாங்கி முல்லாக்களே!
பிரசித்தி பெற்ற முல்லாக்களில் ஒருவரான மௌலான மௌதூதி கூறுவதைப் பாருங்கள்:
"இது (ஜமாஅத்தே இஸ்லாமி) ஒரு பிரச்சார அமைப்பல்ல. பிரச்சாரகர்கள், போதகர்கள் ஆகியவர்களின் கூட்டமல்ல. மாறாக இது அல்லாஹ்வின் இராணுவமாகும்" (ஹகீகத்தே ஜிஹாத் - பக்கம் , லாஹூர் தாஜ் நிறுவன வெளியீடு - ஆண்டு)
மார்க்கப் பிரச்சாரம் செய்வதிலோ மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்குப் போதனை செய்வதிலோ இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மாறாக வன்முறை மூலம் இவர்களின் தவறான கொள்கைகளை நிலைநாட்டுவதே இவர்கின் குறிக்கோள் என்பது இந்த வாசகங்களின் மூலம் புலனாகிறது. இதனை உறுதிப்பாடுத்தும் வகையில் மௌதூதி சாஹிப் தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்:
"குழப்பங்களையும் தவறான கொள்கைகளையும் இந்த உலகிலிருந்து அகற்றி மனித இனத்தை சீர்திருத்த எவரேனும் விரும்பினால் அதனை சொர்ப்பொழிவுகள் அறிவுரைகள் மூலமாக செய்ய முடியாது என்பதை உணர வேண்டும். அவை பயனற்றவை!" (ஹகீகத்தே ஜிஹாத் - பக்கம்11 )
"நீர் நினைவூட்டிக் கொண்டே இருப்பீராக, நினைவூட்டிக் கொண்டிருப்பது நிச்சயமாக பயனளிக்கக் கூடியதாகும். இறைவனுக்கு அஞ்சுபவர் நிச்சயமாக அறிவுரையை ஏற்றுக்கொள்வார்" (திருக்குர்ஆன்,87:10,11 )
போதனை, அறிவுரை ஆகியன நிச்சயமாகப் பயனளிக்கும் எனத் திருக்குரானிலே இறைவன் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்களும் மக்களை சீர்திருத்த இதே முறையைத்தான் தன் வாழ் நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் மௌதூதி சாஹிபோ முற்றிலும் கோணலான ஒரு வழியையே காட்டுகிறார். அவர் தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்:
"தவறான ஆட்சிக்கெதிராக அவர் எழ வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதிகார பீடத்திலிருந்து தவறிழைப்பவர்களை அகற்ற வேண்டும். உறுதியான கொள்கைகளையும் நியாயமான நிர்வாகத்தையும் கொண்ட ஓர் அரசை நியமிக்க வேண்டும். (ஹகீகத்தே ஜிஹாத் - பக்கம்11 )
ஓர் அரசு தவறான கொள்கையுடையது என்று இவர்கள் கருதினால் அதற்க்கெதிராக கிளர்ச்சி செய்ய வேண்டும்: அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; என்கிறார் மௌதூதி!இது திருக்குரானின் போதனைகளுக்கும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.
இஸ்லாத்திற்கு முரண்பாடான இத்தகைய நச்சுக் கருத்துக்களையே உலகெங்கும் வாழும் முஸ்லிம்களிடையே இந்த சீர்கெட்ட முல்லாக்கள் பரப்பி வந்திருக்கிறார்கள். இவையே நாளடைவில் வழுப்பெற்று நாசகார செயல்களில் பாமர முஸ்லிம்களை ஈடுபட வைக்கிறது. இவையே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளின் சீரழிவுக்கு காரணம்.
இறுதி காலத்தில் தோன்றும் இத்தகைய சீர்கெட்ட முல்லாக்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். வானத்தின் கீழ் இந்த முல்லாக்கள் கெட்ட உயிரினங்களாக இருப்பார்கள் எனவும் குழப்பங்கள் அவர்களிலிருந்தே தோன்றி அவர்களிடமே முடிவுபெறும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளார்கள். .
எனவேதான் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டவும் நபி(ஸல்) அவர்களின் உயரிய நடைமுறைகளை செயல்படுத்தவும் இக்காலத்தில் தோன்றியுள்ள இமாம் மஹ்தி (அலை) அவர்களை நாம் பின்பற்றியாகவேண்டும்.
முஸ்லிம்கள் அவர்கள் பெற்றிருந்த மகோன்னத நிலையை மீண்டும் பெறுவதற்கு திருக்குர்ஆன் கூறுவதற்கேற்ப உயர்ந்த சமுதாயமாக உலகில் ஒளிர்வதர்க்கும் முல்லாயிசம் முற்றாகத் தொலைக்கப்பட வேண்டும்.