கிறிஸ்து, உலக மக்களின் பாவங்களுக்காகப் பிறந்து சிலுவை மரணத்தை அடைந்தார் என்பது அவருடைய 'சபிக்கப்பட்ட மரணத்தினால்' மற்றவர்கள் மீட்கப்பட்டார்கள் என்பதும் பாவிகளைக் காப்பதற்கு அல்லது இரெட்சிப்பதற்கு சர்வ வல்லமையுள்ள தேவன் தனது மாசற்ற மகனைக் கொன்றார் என்பதும் அவர்களின்(கிறிஸ்தவர்களின்) கூற்றாக இருக்கின்றன.
ஒரு மனிதனுடைய மரணத்தினால் மக்களின் உள்ளத்திலுள்ள பாவத்தின் தீய குணத்தை எப்படி துடைக்க முடியுமென்பதும், குற்றமற்ற மனிதனைக் கொலை செய்வதன் மூலம் மற்றவர்களின் பாவத்திற்கு அதனை பரிகாரம் ஆக்குவது எவ்வாறு என்பதும் நமக்கு புரியவில்லை!
இந்தப் போக்கு நீதிக்கும் கருணைக்கும் முரண்பாடான செயல் ஆகும். குற்றவாளிக்குப் பதிலாக நிரபராதியை தண்டிப்பது நீதியாகுமா? குமாரன் குற்றமற்றவராய் இருக்கும்போது. அவரை குரூரமாக கொலை செய்வது எவ்வாறு தேவ நீதியாகும்? இவைஅனைத்தும் அர்த்தமற்ற கூற்றுக்களே!
பாவம் மிகுதியாக காணப்படுவதற்கு இறைவனைப் பற்றிய உண்மையான அறிவு மக்களிடையே இல்லாததே காரணம் என்று நாம் கூறுகிறோம். பாவத்திற்கான அக்காரணத்தை அகற்றாதவரை பாவம் தொலையாது. இவ்வாறிருக்க, இறைவனைப் பற்றிய அறிவை மக்கள் பெறாமலேயே பாவம் இல்லாமல் போய்விட்டது என்று கூறுவது ஒரு வினோதமான தத்துவமாகும். ஒன்றைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளாதவரை அதன் உண்மையான மதிப்பை நாம் உணர இயலாது. அதன் மீது உளப்பூர்வமான பற்றோ அல்லது அதைப்பற்றிய அச்சமோ நமக்கு ஏற்படாது. பற்றும் அச்சமும் செயலுக்குரிய தூண்டுகோல் ஆகும். ஒன்றின் மீது பற்றோ அச்சமோ இல்லாவிடின் அதன் மீது அலட்சியமே ஏற்படும். செயலுக்கு அங்கே இடமிருக்காது. எனவே இறைவனைப் பற்றி முழுமையாக தெரிந்து அவன் மீது பற்றும் அச்சமும் ஒருவன் கொள்ளாத வரை பாவச் சிறையிலிருந்து அவனால் மீள முடியாது.
கிறிஸ்தவர்களின் கொள்கையை ஆராய்ந்தால், இறைவனைப்பற்றி மிகக் குறைவாகவே அவர்கள் தெரிந்திருக்கிறார்கள் என்பதை உறுதியாக கூற இயலும். அவர்கள் தெய்வீக வெளிப்பாட்டின் வாயில்கள் எப்போதும் மூடப்பட்டும் அற்புதங்கள் கிறிஸ்துவோடும் அவரது சீடர்களோடும் முடிவுபெற்று விட்டன என்று கருதுகின்றனர். அவ்வாறாயின் கிருஸ்தவ மதம் உண்மையானது என்று தீர்மானிப்பதற்கு நியாய அத்தாட்சிகளைத் தவிர வேறென்ன இருக்கிறது? ஆனால் ஒரு மனிதனை இறைவன் என்று கூறுவதை நியாய உணர்வு நிராகரிக்கின்றது. சுவிசேஷங்களில் காணப்படும் அற்புதங்களைப் பற்றிய கதைகளை கிருஸ்தவ மதத்தின் உண்மைக்கு சான்றாக காட்ட முயன்றால் அதற்கெதிரான ஆட்சேபனைகளை கிருஸ்தவனல்லாத ஒருவனால் கூற இயலும். முதலில் அந்தக் கதைகளில் உண்மை எவ்வளவு இருக்கிறது என்பது கூற இயலாத ஒன்று. கிறிஸ்தவர்களின் வரலாற்றை எழுதியவர்கள் எல்லைகளைக் கடந்தவர்கள் என்பது சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று. உதாரணமாக, சுவிசேஷங்கள் ஒன்றில் கிறிஸ்து செய்த வேலைகளை நூல்களில் எழுதுவதென்றால் அந்நூல்களை வைப்பதற்கு இவ்வுலகம் போதாது என்று கூறப்பட்டுள்ளது. இது எல்லை கடந்த எழுத்தேயாகும். உலகின் ஒரு மூலையில், ஒரு மனிதன் முப்பத்துமூன்று ஆண்டுகள் செய்த பணிகளை, எழுதி வைக்க இவ்வுலகம் போதாததாகிவிடுமா? அடுத்து கிறிஸ்துவால் காட்டப்பட்ட அற்புதங்கள் மோசே காட்டிய அற்புதங்களை விடச் சிறந்தவைகள் அல்ல. எலியா தீர்க்கதரிசியால் காட்டப்பட்ட அற்புதங்கள் கிறிஸ்துவின் அற்புதங்களை விடச் சக்தி வாய்ந்தவை. எனவே ஒரு சில அற்புதங்களை செய்து கிறிஸ்து இறைவனாக முடியுமென்றால் அநேக தீர்க்கதரிசிகளையும் இறைவனாக நாம் கருத வேண்டி வரும்.
சுருக்கமாக கூறுவதென்றால் கிருஸ்தவ சமயம் இரெட்சிப்பின் வழியினை காட்டவில்லை. பாவத்திலிருந்து மீட்சிபெற வழி காட்டாவுமில்லை. அதுவுமல்லாமல், மற்றவர்களை மீட்க ஒருவர் பலியானார் என்று கூறப்படுகிறது. தற்கொலையே ஒரு பாவமல்லவா? கிறிஸ்து தாமாகவே தம்மை சிலுவையில் அர்பணித்து கொள்ளவில்லை. என்பதை ஆணையிட்டு நம்மால் கூற இயலும். அது அவருடைய்ய எதிரிகள் அவருக்கு இழைத்த கொடுமை! சிலுவை மரணமான சபிக்கப்பட்ட மரணத்திலிருந்து தம்மைக் காத்தருள வேண்டுமென இயேசு இரவெல்லாம் கண்ணீர் விட்டு தொழுது பரம பிதாவிடத்தில் வேண்டியிருக்கிறார். இவ்வாறே நாம் சுவிசேஷத்தில் நாம் காண்கிறோம். அவருடைய்ய பிராத்தனையின் பயனாகவும், நற் செயல்களின் பயனாகவும் அவர் அந்த மோசமான மரணத்திலிருந்து காப்பாற்றப்பற்றார். இயேசு சிலுவையில் தம்மை அர்பணித்து கொண்டார் என்று கூறுவது இயேசு மீது சுமத்தப்படும் ஒரு பெரிய அபாண்டமாகும். மேலும் ஜோனுடைய தலை நொறுங்கியதால் பீட்டருடைய தலைவலி குணமானது என்று கூறுவது பகுத்தறிவு வாதமாகுமா?