அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இயேசுவின் இரண்டாவது வருகை - ஒரு தவறான கண்ணோட்டம்


'இரண்டாவது வருகை' பற்றிய நம்பிக்கை இயேசுவின் காலத்தில் கூட இருந்தது. எலியா தீர்க்கதரிசி மீண்டும் வருவார் என அக்காலத்து யூதர்கள் நம்பினார்கள். (இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.) ஏனெனில் பழைய ஏற்பாட்டில் ,

"எலியா சுழல் காற்றில் பரலோகத்திற்கு ஏறிப்போனான்" (11 இராஜாக்கள் 2:7)

என்று காணப்படுகிறது. ஆனால் எலியா வானத்திலிருந்தோ பரலோகத்திலிருந்தோ வருவார் என்பதை இயேசு ஏற்கவில்லை. புதிய

ஏற்பாட்டில் இவ்வாறு காணப்படுகிறது. :-

"அப்போது அவருடைய சீசர்கள் அவரை நோக்கி அப்படியானால் எலியா

முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் கொள்கிறார்களே, அதெப்படி என்று கேட்டார்கள் - இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தமாக எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவார் என்பது மெய்தான் - ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவானைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீசர்கள் அப்பொழுது அறிந்து கொண்டனர்." (மத்தேயு 17:10)

இதில், எலியா வரவேண்டும் என்பதை இயேசு ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதே எலியா மீண்டும் வருவார் என்பதை அவர் ஏற்கவில்லை. சென்று போன எலியா வராத நிலையில் எலியா வந்தாயிற்று என்று அவர் கூறியதிலிருந்து எலியா வருவாரென்பது அதே எலியா மீண்டும் வருவதைக் குறிக்காது. மாறாக அவரைப் போன்ற இன்னொருவரின் வருகையையே அது குறிக்கும் என இயேசு கருதினார் என்பது தெளிவாகிறது. சென்று போன ஒருவர் மீண்டும் வருவார் எனக் கூறப்பட்டால் அவருடைய 'ஆவியிலும் தத்துவத்திலும்' இன்னொருவர் வருவார் என்பது இயேசுவின் கருத்து. இயேசுவின் இந்தக் கருத்திற்கு முரண்படுகின்ற வகையில், இயேசு மீண்டும் வருவார் என்று கிருஸ்தவர்கள் நம்புகின்றனர். இது போன்ற ஒரு தவறான நம்பிக்கையைக் கைக்கொண்டிருந்ததால்தான் எலியாவை எதிர்பார்த்து இயேசுவை ஏற்காது யூதர்கள் வழி கெட்டுப் போனார்கள்.

இயேசுவின் கருத்தின் படி இயேசு மீண்டும் வருவார் என்பது இயேசுவைப் போன்ற இன்னொருவரின் வருகையையே குறிக்கும். இயேசுவின் இந்த இரண்டாவது வருகை இன்றிலிருந்து நூறாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டது.

அஹ்மதிய்யா ஜமாஅத் என்ற அமைப்பை தோற்றுவித்த ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள். நான் கிருஸ்தவர்களுக்கு இயேசுவாகத் தொன்றியுள்ளேன் என்றும் எனது வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகை நிகழ்ந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்கள். எனவே கிருஸ்தவர்கள் எண்ணிக்கொண்டிருப்பது போன்று இயேசு மீண்டும் வரப்போவதில்லை இயேசுவிற்கு உடன்பாடில்லாத இந்தத் தவறான நம்பிக்கையை கிருஸ்தவர்கள் கைவிட்டுவிட்டு இக்காலத்தில் இயேசுவாகத் தோன்றி யிருப்பவரை ஏற்க முன்வரவேண்டும்.