அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஹஸ்ரத் இப்ராஹீம் நபிக்கு பி.ஜே செய்த அவமரியாதை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 336 இல் நான் நோயாளி எனக் கூறினார் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இப்ராஹீம் நபி அவர்கள் ஊர் மக்களெல்லாம் திருவிழாவைக் கொண்டாட வெளியேறிய பின் சிலைகளைத் தகர்ப்பதற்காக தாம் நோயாளி என்று கூறி திருவிழாவுக்குச் செல்வதை தவிர்த்துக் கொண்டார்கள் (37:89)

இது போல் ஒரு கொள்கையை நிலைநாட்டுவதற்காக நல்ல விளைவை ஏற்படுத்துவதற்காக கூறப்படும் பொய் குற்றமாகாது என்பதை இதிலிருந்து அறியலாம் என்று எழுதியுள்ளார். மேலும் சத்தியப் பிரச்சாரத்தின் போது இது போன்ற வழிமுறைகளை கையாளுவது தடுக்கப்பட்டதல்ல என்றும் கூறியுள்ளார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 432)

நம் விளக்கம்:

இந்த வசனத்தில் 37:90 இப்ராஹீம் நபி பொய் கூறினார் என்பதை திருக்குர்ஆன் அல்லது நம்பத்தகுந்த நபிமொழியில் இருந்து பி.ஜே நிரூபிக்க முடியுமா?

அல்லாஹ்வும் ரஸுலும் கூறாத ஒன்றை பி.ஜே இட்டுக்கட்டி கூறியுள்ளார் என்பதை அவரால் மறுக்க முடியுமா?

நான் நோயாளி என்று ஒரு நபி கூறுகின்ற போது அவர் நோயாளி இல்லை என்று கூறுகின்ற அதிகாரம் பி.ஜே க்கு எப்படி வந்தது?

இப்ராஹீம் நபி ஒரு உண்மையான நபியாக இருந்தார் என்று அல்லாஹ் கூறுகிறான். (19:42) ஆனால் பி.ஜே இப்ராஹீம் நபி பொய் கூறினார் என்று கூறுகின்றார். அல்லாஹ்வின் வார்த்தையை மறுக்கின்ற பி.ஜே தவ்ஹீதுவாதியா?

ஒரு நபி பொய் சொல்லமாட்டார்: பொய் சொல்லக் கூடியவர் நபியாக இருக்கமாட்டார் என்ற ஒரு நபியைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களை எவ்வாறு அழைப்பது.?

இப்ராஹீம் நபியின் இந்த சம்பவத்திலிருந்து ஒரு கொள்கையை நிலைநாட்ட பொய் கூறலாம் என்று பி.ஜே கூறுகிறார். இதிலிருந்து தவ்ஹீது ஜமாஅத்தின் கொள்கைகள் பொய்யினால் நிலைநாட்டப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகவில்லையா?

நல்ல விளைவை ஏற்படுத்துவதற்கு பொய் சொல்லலாம் என்று கூறுகிறார். ஆனால் திருக்குர்ஆனோ பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக(3:62) என்றும் ஒவ்வொரு பொய்யரின் மீதும் சைத்தான் இறங்குகின்றனர் (26:223) என்றும் கூறுகிறது. இப்படிப்பட்ட நல்ல விளைவை (!) ஏற்படுத்தும் எத்தனை பொய்களை பிறரை ஏமாற்ற பி.ஜே கூறினாரோ! அல்லாஹ்வே நன்கறிவான்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் இல், 432 இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்? எனும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:

திருக்குர்ஆன் 21:63 இல், இப்ராஹீமே, நீர் தாம் எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தீரா? என்று கேட்டனர். இல்லை அவற்றில் பெரிய சிலை தான் செய்தது என்று தமிழாக்கம் செய்துவிட்டு விளக்க அட்டவணையில் பெரிய சிலைதான் உடைத்தது என்று கூறினார்கள்... ஆனால் அவர் கூறியது உண்மையல்ல.

நம் விளக்கம். பி.ஜெக்கு ஒரு நபியின் இலக்கணமும் தெரியவில்லை. பொய்யின் இலக்கணமும் தெரியவில்லை. ஒரு கூற்று பொய் என்பதற்கு நிபந்தனை, அது பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாதது சொல்லப்பட்டிருக்க வேண்டும், சிலை உடைப்பு விசயத்தில் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்மை ஏமாற்றுவதற்காக அவர்களது சமுதாயத்தினர் துளியும் கருதவில்லை. காரணம் இச்செயலை செய்தவர் ஒருவர் உண்டு, யார் என்று பெரிய சிலையிடம் கேளுங்கள் என்று கூறினார். எனவே அவர்கள் வெட்கத்தால் தலைகுனிந்தவர்களாக, திரும்பிச் சென்றதாக அடுத்து வரும் வசனங்கள் கூறுகிறது. (21:65,66) எனவே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) கூறியது பொய் அல்ல. alim.org இல் மாலிக் அவர்கள் திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த வசனத்தை இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார். He replied, "Surely someone has done it; the chief of them, that is! Ask them, if they can speak!" மேல் உள்ள லிங்கை கிளிக் செய்யவும். ஆனால் சிலை வணங்கிகளாக இருந்த அந்த சமுதாயத்தினர் சுமத்தாத குற்றச் சாட்டை பி.ஜே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) மீது சுமத்துகின்றார் இல்லை என்று பொய் கூறியதுடன் பெரிய சிலை மீது அக்குற்றத்தைப் போட்டதாக எழுதியுள்ளார். இதனை நியாயப்படுத்த திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 432 இல் அவர் கூறுவதாவது, சொல்பவருக்கும் பொய் சொல்கிறோம் என்று தெரிகிறது. கேட்பவருக்கும் வேறு ஒரு அர்த்தத்தில் சொல்லப்படுகின்ற பொய் என்று தெரிகிறது அப்படியிருந்தால் இது பொய் வடிவில் அமைந்த மெய் என்றுதான் கூற வேண்டும் என்று பி.ஜே எழுதுகிறார்.

அதாவது இப்ராஹீம் நபிக்கும், அந்த மக்களுக்கும் அது பொய் என்று தெரிகிறதாம். இப்படியிருந்தால் அது பொய் வடிவில் அமைந்த மெய்தான் என்கிறார். பி.ஜே.

நான் கேட்கிறேன்: இன்று ஏதோ சில அமைப்புகள் செய்கின்ற தீவிரவாத செயல்களுக்கு, ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் முஸ்லிம் தீவிரவாதி என்றும் கூறுகின்றன. இதனை பி.ஜே மேலே சொன்ன அளவுகோலின் அடிப்படையில், முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதம் என்பதை பொய். பொய் வடிவில் அமைந்த மெய் என்று ஏற்றுக் கொள்வார் போலும். உண்மையை வேறு வடிவில் கூற வேண்டுமே ஒழிய பொய்யை எந்த வடிவில் யார் கூறினாலும் அது பொய் தான். மெய்யாகாது. எனவே பி.ஜே எதிர்காலத்தில், பொய்க்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவதை விட்டு விட வேண்டும். என்பதுதான் நம் வேண்டுகோள்.